கடன் வாங்கிய பணத்தில் லாட்டரி; கோடீஸ்வரரான சூளை தொழிலாளி

பக்கத்து வீட்டுக்காரரிடம் கடன் வாங்கி அந்தப் பணத்தில் லாட்டரி சீட்டு வாங்கிய செங்கல் சூளை தொழிலாளிக்கு ஒன்றரை கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் சங்க்ரூர் மாவட்டம் மாண்ட்வி என்ற கிராமத்தில் வசித்து வருபவர் மனோஜ் குமார் (வயது 40). இவரது மனைவி ராஜ் கௌர். இருவரும் செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வந்தனர். தினக்கூலி வேலை செய்யும் இருவரும் செங்கலுக்கு 50 பைசா வீதம் தினமும் 250 ரூபாய் கூலி பெற்று வந்தனர்.

மனோஜ் குமார் பக்கத்து வீட்டுக்காரரிடம் 200 ரூபாய் கடன் பெற்று, அந்தப் பணத்தில் பஞ்சாப் மாநில ராக்கி பம்பர் லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார். அவர் லாட்டரி வாங்கியது இதுவே முதல்முறை. ஆகஸ்ட் 30ம் தேதி, அஞ்சலக ஊழியர் ஒருவர் மனோஜ் குமாருக்கு லாட்டரியில் பரிசு கிடைத்துள்ள விவரத்தை தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு தன் தந்தை ஹாவா சிங் உடல்நலிவுற்று இறந்து விட்டதாகவும், தன்னிடமிருந்த குறைந்த சேமிப்பை செலவழித்து வைத்தியம் பார்த்தும் பலனில்லை என்றும் கூறியுள்ள மனோஜ் குமார், முன்பே தனக்கு பரிசு கிடைத்திருந்தால் தந்தைக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்திருக்க முடியும் என்று ஆதங்கப்பட்டுள்ளார்.

ஒன்றரை கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ள செய்தி பரவியதும், நில விற்பனை தரகர்களும், வங்கி அதிகாரிகளும் தன்னை தொடர்பு கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பன்னிரண்டாம் வகுப்பு முடித்து விட்டு வேலை தேடிக்கொண்டிருக்கும் தன் மூத்த மகளை தொடர்ந்து படிக்க வைக்க இருப்பதாகவும், செவிலியர் படிப்பு படிக்க வேண்டும் என்று விரும்பிய தம் இரண்டாவது மகளை மருத்துவம் படிக்க வைக்க முயற்சிக்கப் போவதாகவும், பத்தாவது வகுப்பு படிக்கும் மகனை அவன் விரும்புவது போல மத போதகராக்க இருப்பதாகவும், நான்காவது மகள் ஆறாம் வகுப்பு படிப்பதாகவும் மனோஜ் குமார் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

நிலம் வாங்கி விவசாயம் செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும், நல்ல வீடு ஒன்றை கட்டி குடும்பத்தை அதில் குடியேற்றுவதே தம் முதல் விருப்பம் என்று மனோஜ் குமார் கூறியுள்ளார்.

பணம் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் அனைத்தையும் உரிய அலுவலகத்தில் அவர் சமர்ப்பித்துள்ளார். இன்னும் இரண்டொரு மாதங்களில் பரிசு பணம் அவருக்குக் கிடைக்கும் என தெரிகிறது.

Latest Photos of the News

 

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

 

Recent Videos

Recent News

 

 

Most Read News