மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்க்கிறீர்களா? மன அழுத்தம் வரும்!
By SAM ASIR
சோஷியல் மீடியா என்னும் சமூக ஊடகங்கள் வந்ததும் வந்தன, அனைவரது அன்றாட செயல்பாடுகளும் பொதுவெளிக்கு வந்து விட்டன.
"கிரகபிரவேசம்..."
"புது கார்"
"சிங்கப்பூர் சுற்றுலாவில் எடுத்த படங்கள்"
என்று நம் நட்பு வட்டத்தில் தினசரி யாராவது ஏதாவது ஒரு பதிவினை போடுகின்றனர்.
பதிவின் கீழே 'கங்கிராட்ஸ்' 'வாழ்த்துகள்' 'வாழ்க வளமுடன்' என்றெல்லாம் பின்னூட்டங்களும் கொட்டும்.
பார்ப்பவர்கள் எல்லோரும் மனதார அவரை வாழ்த்துவதுடன் நின்று விடுகிறார்களா? அவர்களுள் பலர், தங்கள் சமூக பொருளாதார நிலையை ஒப்பிட்டு பார்க்கின்றனராம்.
மற்றவர்களோடு தங்களை ஒப்பிட்டு பார்ப்பவர்கள் எப்போதும் கவலை, மனச்சோர்வு மற்றும் மனஅழுத்தத்திற்குள்ளாகின்றனர் என்று அமெரிக்காவில் டக்ளஸ் ஜென்டைல் என்பவர் தலைமையில் நடந்த ஆய்வு ஒன்று கூறுகிறது.
இந்த ஆய்வில் மன சஞ்சலத்தை குறைத்து மகிழ்ச்சியை கொண்டு வரும் வெவ்வேறு செயல்பாடுகள் நடைமுறையில் சோதிக்கப்பட்டன. இதற்கென கல்லூரி மாணவ மாணவியர் குழுக்களாக பிரிக்கப்பட்டனர். கல்லூரியை விட்டு வெளியே சென்று ஆய்வு குழுவினரின் அறிவுரைப்படியான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
கனிவு, பிணைப்பு, கீழ்நோக்கு சமுதாய ஒப்பீடு என்று மூன்று காரணிகள் இந்த ஆய்வில் சோதிக்கப்பட்டன.
கனிவு: ஒரு குழுவினர், கல்லூரிக்கு வெளியே சென்று மக்களை கவனிக்கின்றனர். ஒவ்வொருவரையும் பார்க்கும்போது, "இந்த மனுஷன் சந்தோஷமா இருக்கணும்," என்று தங்களுக்குள் சொல்லிக்கொள்ள வேண்டும். இதுவே அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளை. இதைச் செய்த மாணவ மாணவியர் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தனர்.
பிணைப்பு: இரண்டாவது குழுவினர், வெளியே பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தங்களுக்கும் இடையே எந்த வித இணைப்பு உள்ளது என்று எண்ணி பார்த்தனர். தாங்கள் அந்த இடத்தில் இருந்தால், என்ன விதமான நம்பிக்கையை, உணர்வுகளை கொண்டிருப்போம் என்ற யோசித்துப் பார்த்தனர்.
கீழ்நோக்கு சமுதாய ஒப்பீடு: வெளியே பார்க்கும் மக்களை காட்டிலும் தாங்கள் எவ்விதத்தில் சிறந்தவர் என்று இந்தக் குழுவினர் சிந்திக்கவேண்டும்.
இவர்களை தவிர, கட்டுப்படுத்தும் குழுவினர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தனர். வெளியே இருக்கும் மக்கள் அணிந்திருக்கும் ஆடை, பயன்படுத்தும் வண்ணங்கள், ஒப்பனைகள் மற்றும் சாதனங்களை இவர்கள் குறிப்பெடுத்தனர்.
மூன்று குழுவினரும் ஆய்வுக்கு செல்லும் முன்னரும் சென்று வந்த பின்னரும் அவர்களது மன சஞ்சலம், மகிழ்ச்சி, மன அழுத்தம், பச்சதாபம், பிணைப்பு ஆகிய மன நலன்கள் அளவிடப்பட்டன.
இதில் கனிவு பிரிவினரே அதிக மகிழ்ச்சியாக இருப்பது தெரிய வந்தது. மற்றவர்களோடு தங்களை ஒப்பிட்ட குழுவினர், இந்த ஆய்வால் எதிர்மறை பலன்களையே பெற்றிருந்தனர்.
மற்றவர்கள் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைப்பதே நம் மனதுக்கு மகிழ்ச்சியை தரும்; மற்றவர்கள் நலன் நாடாதோர்கூட, பயிற்சியின் நிமித்தம் மற்றவர்களை வாழ்த்தும்போது நற்பலன் கிடைத்தது என்பதும் தெரிய வந்தது.
ஆகவே, மற்றவர்களோடு நம்மை ஒப்பிடாதிருப்போம்; எப்போதும் மனதார மற்றவர்களை வாழ்த்துவோம்; சந்தோஷமும் சமாதானமும் நம் வாழ்வில் நிலவும்.