அவர் எவ்வளவோ பேருக்கு உதவி செய்திருக்கிறார் தெரியுமா? ரித்திஷ் மறைவுக்கு கதறும் பிரபலங்கள்
நடிகரும் முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே. ரித்திஷ் அவர்களின் மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மறைவுக்கு தமிழ் திரையுலகினர் வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இயக்குநர் பாரதிராஜா விடுத்துள்ள அறிக்கையில் `` ரித்திஷ் மறைவால் தவிக்கும் அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரின் மறைவு தமிழ் சினிமாவிற்கு பெரும் இழப்பாக கருதுகிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜே.கே.ரித்தீஷின் மறைவிற்கு வெங்கட் பிரபு ‘’ ரித்திஷ் மிகவும் நல்ல மனிதர். ஏன் இவ்வளவு சீக்கிரம் இந்த உலகை சென்றார்.’’ என்று பதிவிட்டிருக்கிறார்.
தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ``நடிகரும், முன்னாள் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினருமான ஜெ.கே.ரித்தீஷ் (எ) சிவகுமார் காலமானார் என்கிற செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தோம்.
அவரது மறைவு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளுக்கும், நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும் பெரிய இழப்பாகும்.
அவரது இழப்பால் மீளா துயரத்தில் ஆழ்ந்துள்ள குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது. அன்னாரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் விஷால் ``ஜே.கே. ரித்திஷ் மறைவு அதிர்ச்சியை அளிக்கிறது; ஒரு நல்ல நண்பரை இழந்துவிட்டேன் ’’ என்றுக் குறிப்பிட்டுள்ளார்.
``கலையுலகிலிருந்து அரசியலுக்கு போய் வெற்றி பெற்றவர் ரித்திஷ். அவர் எவ்வளவோ பேருக்கு உதவி செய்திருக்கிறார் என்கிற தகவல் எனக்கு வரும் போதெல்லாம் அவரை நினைத்து சந்தோஷப்படுவேன்…அவரது மறைவை கேள்விப் பட்டு அதிர்ச்சி அடைந்தேன்.. அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்’’ என ராகவா லாரன்ஸ் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
``ஜே.கே.ரித்திஷ் மரணம்: வலியையும் வேதனையையும் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை’’ என ஆர்.ஜே.பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் நிறைய பிரபலங்கள் தங்கள் வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர். அதுமட்டுமில்லை ரித்தீஷ் உடலைப் பார்த்து அப்பகுதி மக்கள் கதறி அழுகின்றனர். ஒருவர் எவ்வளவு நல்லவர் என்பது அவரின் இறப்பில் தான் தெரியும் என்பார்கள். அது உண்மை தான்.