124 நாடுகளில் கொரோனா.. 1.4 லட்சம் பேருக்குப் பாதிப்பு.. ஐந்தாயிரம் பேர் பலி
உலகம் முழுவதும் 124 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இது வரை ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சீனாவில் ஹுபெய் மாகாண தலைநகர் உகான் நகரில் கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் முதன் முதலாகக் கடந்த டிசம்பரில் கண்டறியப்பட்டது. தற்போது சீனா முழுவதும் பரவியுள்ள இந்த நோய் தாக்குதலில், அந்நாட்டில் மட்டும் 3,200 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய நிலவரப்படி 80,815 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கொரோனா வைரஸ் இந்தியா உள்பட 124 நாடுகளுக்குப் பரவியுள்ளது.
சீனாவுக்கு அடுத்தபடியாக அதிகபட்சமாக இத்தாலியில் கொரோனாவுக்கு 1266 பேரும், ஈரானில் 514 பேரும் பலியாகியுள்ளனர். இத்தாலியில் 17,660 பேரும், ஈரானில் 11,364 பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இந்தியாவில் 2 பேர் பலியாகியுள்ளனர். 82 பேருக்கு நோய்ப் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.உலகம் முழுவதும் ஒரு லட்சத்து 40,720 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் 5,349 பேர் இது வரை பலியாகியுள்ளனர். ஏற்கனவே இந்த வைரஸ் தாக்கியவர்களில் 70 ஆயிரம் பேர் குணமடைந்திருக்கிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது.