தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரம் தாண்டியது.. சென்னையில் 13,362 பேர் பாதிப்பு..

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டியது. பலி எண்ணிக்கையும் 154 ஆக உயர்ந்தது.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் பல மாநிலங்களில் பரவியிருக்கிறது. தமிழகத்தில் தினமும் புதிதாக 700 பேருக்கு மேல் கொரோனா தொற்று பரவி வருகிறது.

நேற்று(மே29) மட்டும் புதிதாக 874 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில், வெளிமாநிலங்களிலிருந்து வந்த 141 பேர் அடக்கம். நேற்று,மகாராஷ்டிராவிலிருந்து வந்த 135 பேர், கேரளாவில் இருந்து வந்த 3 பேர் மற்றும் மேற்குவங்கம், கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களிலிருந்து வந்த தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

தற்போது, தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,246 ஆக அதிகரித்துள்ளது. இதில் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 765 பேரையும் சேர்த்து மொத்தம் 11,313 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு நேற்று 9 பேர் உயிரிழந்ததை அடுத்துப் பலி எண்ணிக்கை 154 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் தினமும் 500 பேருக்குக் குறையாமல் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் 618 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சென்னையில் மட்டும் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 13,362 ஆக அதிகரித்துள்ளது.சென்னை தவிர, காஞ்சிபுரத்தில் 12 பேருக்கும், கடலூரில் 5 பேருக்கும், திருவள்ளூரில் 9 பேருக்கும், செங்கல்பட்டில் 61 பேருக்கும் நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கன்னியாகுமரி, ஈரோடு, அரியலூர் மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் நேற்று கொரோனா பாதிப்பு தெரிய வந்தது.

More News >>