டிடிவி தினகரன் மாநாட்டில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பார்கள் - செந்தில் பாலாஜி அதிரடி
மதுரை மேலூரில் நடைபெறவுள்ள மாநாட்டில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும், டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக எம்.எல்.ஏ.க்களும் கலந்துகொள்வார்கள் என்று செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, “அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வருவதற்கு முன்பாக இடைக்கால ஏற்பாடாக ஒரு புதிய கட்சியை வரும் 15ம் தேதி மதுரை மேலூரில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் டி.டி.வி. தினகரன் அறிவித்து கட்சியை, கொடியை அறிமுகப்படுத்துகிறார்.
இதில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும், டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பதால் கட்சி தாவல் தடை சட்டத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது.
தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும். தமிழகத்தில் இன்னும் ஒரு மாதத்தில் ஆட்சி மாற்றம் வரும். தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி வருகிறது. இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com