வாய் துர்நாற்றத்தைப் போக்கும்..இரத்தக் கொதிப்பை மட்டுப்படுத்தும் - உலர் திராட்சை மருத்துவப் பயன்கள்
கிஸ்மிஸ் என்று நாம் கூறும் உலர் திராட்சையை பார்த்தால், நோஞ்சான்போல் தோற்றமளிக்கும். வதங்கி வற்றிப்போன தோற்றம்! இதை சாப்பிட்டு என்ன பலன் கிடைத்துவிடப் போகிறது? என்ற எண்ணம் நமக்குள் எழும்புவது இயற்கை.
கேசரி, பாயாசம், கீர் போன்றவற்றில் உலர் திராட்சை சேர்க்கப்பட்டிருப்பதை பார்க்கலாம். ஒருவேளை இதுபோன்றவற்றில் சுவை சேர்ப்பதற்காக மட்டுமே உலர் திராட்சை பயன்படுத்தப்படுகிறது என்று நாம் நினைத்தால் அது தவறு. உலர் திராட்சையில் அதிக சத்துகள் உள்ளன. இயற்கை சர்க்கரை நிறைந்த உலர் திராட்சையில் இரும்பு, பொட்டாசியம், சுண்ணாம்பு சத்து (கால்சியம்) ஆகியவையும் அதிக அளவில் உள்ளன.
எப்படி சாப்பிட வேண்டும்?
உலர் திராட்சையை அப்படியே சாப்பிடுவதற்குப் பதிலாக இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து பின்னர் சாப்பிடுவது அதிக பயனளிக்கும். இரவில் ஊற வைத்து, காலையில் வெறும் வயிற்றில் அதை சாப்பிடவேண்டும். உலர் திராட்சையின் வெளிப்புற தோலில் படிந்திருக்கும் வைட்டமின்கள் மற்றும் தாதுகள் நீரில் கரைந்து, உடலில் சேர்வதற்கு ஏற்றவிதமாய் மாறியிருக்கும்.
இரத்தக் கொதிப்பு
உணவு மூலம் உடலில் அதிக அளவு உப்பு சேர்வதால் உயர் இரத்த அழுத்தம் என்னும் இரத்தக் கொதிப்பு ஏற்படுகிறது. உலர் திராட்சையிலுள்ள பொட்டாசியம் நம் உடலிலுள்ள உப்பின் அளவை சமநிலைப்படுத்தி, இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.
மன அழுத்தம்
மன அழுத்தத்தை உணர்ந்தால் தியானம் செய்வதோடு, கையளவு உலர் திராட்சை சாப்பிடலாம். இதில் ஆர்ஜினைன் என்ற பொருள் உள்ளது. தினமும் உலர் திராட்சை சாப்பிட்டால் ஆர்ஜினைன் நம் மன அழுத்தத்தை குறைக்க உதவும்.
மலமிளக்கி
உலர் திராட்சையில் நார்ச்சத்து நிறைந்திருக்கும். நீரில் ஊற வைக்கப்பட்ட உலர் திராட்சை இயற்கை மலமிளக்கியாக செயல்படும். உலர் திராட்சை செரிமானத்தை வேகமாக்குவதுடன் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.
உடல் எடை
உலர் திராட்சையில் இயற்கை சர்க்கரை நிறைந்துள்ளது. ஆகவே, இனிப்பு சாப்பிடவேண்டுமென்ற தேட்டத்தை இது குறைக்கிறது. இனிப்பு பொருளை சாப்பிட்டால் உடலில் அதிக கலோரி சேரும். உலர் திராட்சை, இனிப்புமீதான தேடலை குறைப்பதால் இனிப்பு மூலம் அதிக கலோரி உடலில் சேருவது தடுக்கப்படுகிறது. இதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும். ஆனால், அதிக அளவில் உலர் திராட்சையை சாப்பிடக்கூடாது.
நோய் தடுப்பாற்றல்
உலர் திராட்சையிலுள்ள பி மற்றும் சி ஆகிய வைட்டமின்கள் உடலின் நோய் தடுப்பாற்றலை அதிகரிக்கின்றன. இதன் மூலம் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கலாம்.
பலமான எலும்பு
எலும்பு உருவாக்கத்திற்கு இன்றியமையாத போரான் உலர் திராட்சையில் அதிக அளவில் உள்ளது. எலும்புக்கு உறுதியளிக்கும் சுண்ணாம்பு சத்தும் (கால்சியம்) இதில் உள்ளது. நீரில் ஊற வைத்த உலர் திராட்சையை சாப்பிடுவதன் மூலம் எலும்பு அடர்த்தியை அதிகரிக்க முடியும்.
வாய் துர்நாற்றம்
உலர் திராட்சையிலுள்ள கிருமிநாசினி தன்மை வாயை ஆரோக்கியமாக காக்கிறது. ஆகவே, வாய் துர்நாற்றம் அகலுகிறது.
இரத்த சோகை
நம் உடலில் இரத்த சிவப்பணுக்கள் தோன்றுவதற்கு இரும்பு சத்து அவசியம். உலர் திராட்சையிலுள்ள இரும்புச் சத்து உடலில் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி இரத்த சோகையை தடுக்கிறது.
சரும பொலிவு
உலர் திராட்சையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சருமம் சுத்தமாகும். சருமத்தின் மீள்தன்மை (elasticity) அதிகரிக்கும். சருமத்தின் நிறமும் மாறும். சருமத்திற்கு அழகூட்டுவதுடன், கூந்தலை பராமரிக்கவும் உலர் திராட்சை உதவும்.