மன அழுத்தமா? நீங்கள் செய்ய வேண்டியவை எவை தெரியுமா?
நவீன கால வாழ்க்கையில் நமக்கு எல்லாமே கிடைக்கிறது. அவற்றுள் ஒன்று மன அழுத்தம். மன அழுத்தம் அடையாத நபர் யாருமே இல்லை என்று கூறுமளவுக்கு அனைவருமே வாழ்வின் ஏதாவது ஒரு கட்டத்தில் மன அழுத்தத்திற்குள்ளாகிறார்கள். காலை பத்து மணி முதல் மாலை ஆறு மணி வரை அலுவலக வேலை செய்பவராக இருக்கலாம்; சொந்தமாகத் தொழில் செய்பவராக இருக்கலாம்; ஓய்வுக்கால வாழ்க்கையை அனுபவிப்பவராக இருக்கலாம்; பதின் பருவத்தினராக இருக்கலாம் எந்த வேலை செய்பவராக இருந்தாலும் எந்த வயதினராக இருந்தாலும் எப்போதாவது ஏதாவது ஒரு காரணத்திற்காக மன அழுத்தத்திற்குள்ளாவதைத் தவிர்க்க இயலாது.
மன அழுத்தத்தைக் குறைப்பதே ஆயுளை அதிகரிக்கும். மன அழுத்தம் ஏற்படுவதைத் தவிர்க்க இயலாமற் போகலாம்; ஆனால், அதைக் குறைப்பதற்கான முயற்சிகளைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்வது மனஅழுத்தத்தை குறைத்து, மனதை அமைதிப்படுத்த உதவும். உடல் எடையைச் சீராகப் பராமரிக்க உதவுவதோடு, இருதயத்திற்கு ஆரோக்கியத்தையும் அளிக்கும். மன அழுத்தத்தைப் போக்கி, மனதைச் சாந்தப்படுத்துவதில் சில உடற்பயிற்சிகளைச் சிறந்தவை என்று கண்டறியப்பட்டுள்ளது.
ஸ்ரெட்ச்சிங்
கை, கால் போன்ற உறுப்புகளை நீட்டுதல் என்பது உடற்பயிற்சிக்கு முன்பு அல்லது பயிற்சி செய்து முடித்த பின்பு செய்யவேண்டியது என்று கருதுகிறோம். ஆனால், கை கால் மற்றும் உடலை நீட்டுவது அதிக பயனளிப்பதாகும். நாள் முழுவதும் லேப்டாப் முன்பு அமர்ந்து வேலை செய்வதன் காரணமாக உடலில் ஏற்பட்ட விறைப்பு தன்மையை போக்குவதற்கு இது உதவும். பதற்றம், வலி இவற்றிலிருந்து நிவாரணம் அளித்து மனதைச் சாந்தப்படுத்தும்.
யோகாசனம்
உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கக்கூடிய பயிற்சி யோகாசனம். ஆனால் மன அழுத்தத்திலிருந்து இளைப்பாறுதலை அளிக்கக்கூடியதாகும். மனப்போக்கில் மாற்றத்தைக் கொண்டு வரக்கூடியது. எளிதான யோகாசன பயிற்சிகளைத் தொடங்கி பின்னர் கடினமானவற்றைச் செய்யலாம். மனதிற்குச் சமாதானத்தைத் தரக்கூடிய யோகாசனத்தால் மன அழுத்தம் மறையும்.
ஓடுதல்
மன அழுத்தத்தைக் குறைப்பதில் ஓட்டத்திற்கு முக்கிய பங்கு உண்டு. மன அழுத்தத்திற்குள்ளாகும்போது திறந்தவெளியில் ஓடுவது மூளையிலுள்ள வேதிப்பொருள்களில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி மனதைச் சாந்தப்படுத்துகிறது என்பது அறிவியல் பூர்வமான உண்மையாகும். ஆகவே, குழப்பமான உணர்ந்தால் திறந்தவெளியில் ஓடுங்கள்; மனம் அமைதிப்படும்.