மாதவிடாய் தள்ளிப்போகிறதா? காரணம் என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்!
பெண்களுக்கு மாதவிடாய் தள்ளிப்போவதற்கு பெரும்பாலும் கர்ப்பமே காரணமாக இருக்கமுடியும். மாதவிடாய் தள்ளிப்போவதற்கு வேறு பல காரணங்களும் இருக்கின்றன. இளம்பெண் பருவமடைந்த புதிதில் அல்லது மாதவிடாய் நிற்கப்போகும் (மெனோபாஸ்) வயதில் மாதவிடாய் தள்ளிப் போகக்கூடும். 28 நாள்கள் என்பதே சரியான மாதவிடாய் சுற்றாகும். பெண்களின் உடல் பல்வேறு மாற்றங்களை கடந்து செல்வதால் 21 முதல் 35 வரையிலான நாள்களும் ஆரோக்கியமாகவே கருதப்படுகிறது. 35 நாள்கள் கடந்துதான் மாதவிடாய் வருகிறதென்றால் அதை கவனிக்கவேண்டும். கருத்தரிப்பு உறுதியாகாத நிலையில் அடிக்கடி மாதவிடாய் தள்ளிச் சென்றால் அல்லது மாதவிடாயே வரவில்லையென்றால் அதற்குச் சில காரணங்கள் இருக்கக்கூடும்.
ஹார்மோன் மாற்றம்மாதவிடாய் தள்ளிப்போவதற்கு முக்கியமான காரணமாக ஹார்மோன் மாற்றம் இருக்கிறது. சினைப்பை நீர்க்கட்டி (பிசிஓடி) பாதிப்பு மாதவிடாய் தள்ளிப் போவதற்கும் சராசரி சுற்றின் அளவு நீண்டுபோவதற்கும் காரணமாகிறது. ஹார்மோன் சமச்சீராக இல்லாதபட்சத்தில் சினைப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகின்றன. சில பெண்களுக்கு ஆண்களில் இருக்கக்கூடிய ஆண்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக இருக்கும். அது மாதவிடாய் சுற்றிலும், கருத்தரிப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தும். வாழ்க்கை முறையை மாற்றுவது, சரியான மருந்துகளை சாப்பிடுவது ஆகியவை இப்பிரச்னையை தீர்த்து மீண்டும் மாதவிடாய் சுற்றை ஒழுங்காக்குவதற்கு உதவும்.
மனஅழுத்தம்மாதவிடாய் சுற்று ஒழுங்கற்று அமைவதற்கு மன அழுத்தமும் காரணமாகிறது. மிகுந்த மன அழுத்தத்தினூடாக செல்லும் பெண்கள் சிலருக்கு 2 மாதங்கள் கூட மாதவிடாய் தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. மன அழுத்தம் ஹார்மோன் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தும் ஹைபோதலாமஸின் செயல்பாட்டில் மாற்றத்தை உண்டுபண்ணுகிறது. இந்தப் பாதிப்பு, உடல் பருமனாவதற்கு காரணமாகிறது.
இரத்த சோகை மற்றும் இரும்புச் சத்து குறைபாடு குழந்தை பேற்றுக்கான பருவத்தில் இருக்கும் பெரும்பாலான பெண்களுக்கு இரத்தசோகை மற்றும் இரும்புச் சத்து குறைபாடு இருக்கும். உடலில் இரும்புச் சத்து கிரகிக்கப்படுவதில் குறைபாடு இருந்தால், இரத்த ஓட்டம் பாதிப்படையும். அதன் காரணமாக மாதவிடாய் தள்ளிப் போகக்கூடும்.
கர்ப்பத்தை தள்ளிப்போடுதல்சில பெண்களுக்கு மாதவிடாய் ஒழுங்குபடுத்துவதற்காக குழந்தைப் பேற்றை தடுக்கும் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த மாத்திரைகளில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டின் இருப்பதால் ஹார்மோன் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தி மாதவிடாயை 28 நாள் சுற்றாக மாற்றுகிறது. இம்முறையில் முதல் மூன்று வாரங்கள் வெளியாகும் ஹார்மோன்கள் கருத்தரிப்பை தடுக்கும். ஆகவே, மாதவிடாய் தள்ளிப் போகலாம். பிரசவத்தை தள்ளிப்போடும் மாத்திரைகளை நீண்டகாலம் சாப்பிடும் பெண்களுக்கும் மாதவிடாய் சுற்றில் பாதிப்பு ஏற்படலாம்.
குறைந்த உடல் எடைவயதுக்கு ஏற்ற உடல் எடை இல்லையென்றால் கரு முட்டை வெளியேறுவதில் பாதிப்பு உண்டாகும். அதிக எடை இருந்தாலும் இதில் பாதிப்பு ஏற்படும். சரியான வைட்டமின்கள், தாது உப்புகள் நிறைந்த உணவுகளை சாப்பிடாமல் இருப்பதும் மாதவிடாய் சுற்று சீரற்று போவதற்கு காரணமாகலாம்.
நீண்டகால நோய்கள்நீரிழிவு மற்றும் அழற்சி போன்ற குறைபாடுகள், வயிற்று பிரச்னை இருப்போருக்கு ஹார்மோன் பாதிப்பும், மாதவிடாயில் சீரற்ற தன்மையும் இருக்க வாய்ப்புண்டு. அதிர்ச்சி தரும் நிகழ்வுகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு மன அழுத்தத்தின் காரணமாக மாதவிடாய் தள்ளிப்போகக்கூடும்.
தைராய்டுதைராய்டு சுரப்பி, உடலின் வளர்சிதை மாற்றத்தில், ஹார்மோன் தூண்டுதலில், இனப்பெருக்க மண்டலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. தைராய்டு சுரப்பி குறைவாகவோ அல்லது மிகுதியாகவே செயல்பட்டால் பெண்களின் மாதவிடாய் சுற்று பாதிக்கப்படலாம். இதற்கு உரிய மருந்துகள் சாப்பிட்டு நிவாரணம் பெறலாம்.
உடல் பருமன்உடல் எடை குறைவாக இருப்போருக்கு உடல் செயல்பாட்டிலும் மாதவிடாய் சுற்றிலும் பாதிப்பு ஏற்படுவதுபோல, மிகுதியான உடல் எடையும், பருமனும் கொண்டவர்களுக்கும் ஹார்மோன் பிரச்னை இருக்கும். அதிகப்படியான உடல் எடை, அழற்சி (inflammation) ஏற்பட காரணமாகிறது. உடல் பருமனாக இருக்கும் பெண்களுக்கு ஆஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் அதிக அளவில் சுரக்கக்கூடும். இதன் காரணமாக மாதவிடாய் தள்ளிச் செல்வதை மருத்துவர் கண்டுபிடித்தால், உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடுகளை அறிவுறுத்தி மீண்டும் மாதவிடாயை சரியான சுற்றுக்கு கொண்டு வர உதவுவார்.