ஆலிவ் ஆயில் உடலுக்கு எப்படி ஆரோக்கியம் அளிக்கிறது?
உடலை ஆரோக்கியமாகவும், கச்சிதமாகவும் வைத்துக்கொள்வதற்கு ஆலிவ் ஆயிலை பயன்படுத்தும்படி உணவியல் ஆலோசகர்கள் பரிந்துரை செய்கின்றனர். பொதுவாக நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் எண்ணெய்களுக்கு மாற்றாக ஆலிவ் எண்ணெயை உபயோகிக்கும்படி கூறப்படுகிறது. ஆலிவ் என்னும் ஒலிவ எண்ணெய் பல்வேறு நற்குணங்கள் கொண்டது. உடலுக்கு ஊட்டச்சத்து அளிப்பதுடன், தோல் மற்றும் கூந்தலின் ஆரோக்கியத்துக்கும் இது உதவுகிறது. இதில் வெவ்வேறு வகைகள் உள்ளன.
எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயில்: ருசி மற்றும் மணத்தில் எவ்வித குறைபாடும் இல்லாத ஆலிவ் எண்ணெய், எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயில் என்று அழைக்கப்படுகிறது. வேதிப் பொருள்கள் அல்லது வெளிப்புறத்திலிருந்து வெப்பம் எவற்றையும் பயன்படுத்தாமல் எடுக்கப்படும் ஒலிவ எண்ணெய் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. இது ருசி மிகுந்தது. எண்ணெயின் தரத்தை குறிப்பிட பயன்படும் காரணிகளுள் ஒன்றான அமிலத்தன்மை (acidity) 0.8 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும். எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயில் சாலட்டுகள் செய்ய ஏற்றது.
வர்ஜின் ஆலிவ் ஆயில்: வேதிப்பொருள்கள் மற்றும் வெப்பம் ஆகியவற்றை பயன்படுத்தாமல் ஒலிவப்பழங்களை பிழிந்து எடுக்கப்படும் சுத்தமான எண்ணெய் வர்ஜின் ஆலிவ் ஆயில் எனப்படுகிறது. இதில் 2 சதவீதம் வரைக்கும் ஃப்ரீ அசிடிட்டி இருக்கும். இது பொறிப்பதற்கும் வதக்குவதற்கும் ஏற்றது.
ஆலிவ் ஆயில்: சுத்திகரிக்கப்பட்ட (refined) ஆலிவ் ஆயிலுடன், வர்ஜின் வகை ஆலிவ் ஆயிலை கலந்து இது தயாரிக்கப்படுகிறது. கரி மற்றும் வேறு வேதிப்பொருள்களை பயன்படுத்தியும் வடிகட்டியும் இது சுத்திகரிக்கப்படுகிறது. இவ்வகை ஆலிவ் ஆயில் சமையலுக்கு ஏற்றது.
நற்குணங்கள்:ஆலிவ் ஆயிலில் ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் என்னும் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் அதிகம் உள்ளன. இதில் மோனோசாச்சுரேட்டட் என்ற ஆரோக்கியமான வகை கொழுப்பு உள்ளது. அழற்சியை தடுக்கக்கூடிய (anti-inflammatory) குணம் இதற்குள்ளது. உடல் எடையை சீராக பராமரிப்பதில் உதவி செய்கிறது. சருமம் மற்றும் கூந்தலுக்கு ஆரோக்கியம் அளிக்கிறது.