LA Fitness - நியூஜெர்ஸியில் இனப் பாகுபாடு: மூவர் பணிநீக்கம்!

ஸ்டார்பக்ஸ், இனப்பாகுபாட்டினை தவிர்ப்பதற்கான பயிற்சியை தன் பணியாளர்களுக்கு அறிவித்துள்ளது. அதற்கு முந்தைய நாள் உடற்பயிற்சி குழுமமான எல்.ஏ. பிட்னஸின் நியூ ஜெர்ஸி கிளையில் இன துவேஷ சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

கடந்த திங்கள்கிழமை இரவு இச்சம்பவம் நடந்ததாக டிஸ்ராட் ஓட்ஸ் என்பவர் முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். ஓட்ஸின் நண்பர் எல்.ஏ. பிட்னஸில் உறுப்பினர். அதற்கான உறுப்பினர் அட்டை அவரிடம் உள்ளது. அவருடன் ஓட்ஸும் உடற்பயிற்சி செய்வதற்கு ஜிம்முக்கு சென்றுள்ளார். உறுப்பினருக்கான விருந்தினர் என்னும் கெஸ்ட் அனுமதி சீட்டினை ஜிம்மின் மேலாளராக இருந்த பெண்ணிடம் பதிவு செய்து விட்டு நண்பர்கள் இருவரும் பயிற்சி செய்துள்ளனர்.

அவர்கள் வந்து அரை மணி நேரம் கடந்தபோது, உடற்பயிற்சி நிலையத்தின் ஒரு பணியாளர் வந்து, உறுப்பினரான நண்பர் மட்டும் பயிற்சி செய்யலாம்; ஓட்ஸ் பயிற்சிக்கான பணத்தை கட்ட வேண்டும் அல்லது நிலையத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த மற்றவர்கள் முன்னிலையில் கறுப்பினத்தவரான தங்களுக்கு அவமானம் இழைக்கப்பட்டதாக ஓட்ஸ் தன் பதிவு செய்துள்ளார்.

தொடர்ந்து பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, காவல்துறை அதிகாரிகள் இருவர் ஜிம்முக்கு வந்து, ஓட்ஸிடமும் அவர் நண்பரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நடந்ததை விளக்கிவிட்டு, பயிற்சியை தொடர்ந்த சற்று நேரத்தில், ஜிம்மின் மேலாளர் வந்து இருவரையும் உடனே வெளியேறும்படி பணித்துள்ளார். அந்நேரத்தில் ஐந்து காவல் அதிகாரிகளும் வந்து இருவரையும் வெளியேறும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஜிம்மின் மேலாளர், கடைசி வரைக்கும் காரணத்தை கூறாததோடு, தன் நண்பரின் உறுப்பினர் உரிமத்தை ரத்துசெய்து விட்டதாகவும் ஓட்ஸ் அப்பதிவில் கூறியுள்ளார். இது தொடர்பாக அக்குழுமத்தின் பணியாளர் மூவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>