ஜமைக்காவில் துப்பாக்கி சூட்டில் இறந்த இளைஞர்: உடலை நெல்லைக்கு கொண்டு வருவதில் சிக்கல் நீடிப்பு

தென்அமெரிக்க நாடான ஜமைக்காவில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த திருநெல்வேலி இளைஞர் விக்னேஷ் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவருவதில் சிக்கல் நீடிக்கிறது.

தென்காசி மாவட்டம் சுரண்டையை சேர்ந்த சுபாஷ் அமிர்தராஜ் என்பவர் ஜமைக்கா நாட்டில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்தார். இந்த சூப்பர் மார்க்கெட்டில் திருநெல்வேலி சந்திப்பு, மீனாட்சிபுரம், புளியந்தோப்பு நடுத்தெருவை சேர்ந்த நாகராஜன் என்பவரின் மகன் விக்னேஷ் (31) என்பவர்சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார். கடந்த டிசம்பர் 18-ம் தேதி பட்டப்பகலில் இந்த சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளையர்கள் புகுந்தனர். துப்பாக்கியால் மிரட்டி அங்குள்ளவர்களிடம் பணம் பறித்தனர். தப்பி ஓடியவர்களை அந்த கும்பல் சரமாரியாக சுட்டது. இதில் , விக்னேஷ் துப்பாக்கி சூட்டில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் , திருநெல்வேலியிலுள்ள விக்னேஷின் பெற்றோரைதொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். விக்னேஷின் உடல் ஜமைக்கா நாட்டு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சட்ட நடவடிக்கைகள் நிறைவுபெற்று உடல் திருநெல்வேலிக்கு வந்து சேர 10 நாட்களுக்குமேல் ஆகும் என அப்போது தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது 60 நாட்களாகியும் அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டுவர முடியவில்லை.

விக்னேஷின் உடலை ஜமைக்காவிலிருந்து அமெரிக்கா வழியாக இந்தியா கொண்டு வருவதற்கான நடைமுறைகளில் இறங்கி இருக்கும் தனியார் ஏஜென்சியோ தங்களுக்குரிய முழு கட்டணத்தையும் செலுத்தினால்தான் உடலை அனுப்ப முடியும் என தெரிவித்து விட்டது. இதையடுத்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர், நெல்லை வந்த முதல்வர் ஸ்டாலின் ஆகியோரிடத்தில் மனு அளிக்கப்பட்டது. அப்போது, முதல்வர் தமிழக அரசு உதவும் என்று வாக்குறுதி அளித்தார்.

இந்நிலையில் கடந்த ஜனவரி 2-ம் தேதியே உடலை இந்தியா அனுப்புவதற்கான கிட்டத்தட்ட 15 லட்சம் கேட்டு ஜமைக்கா நிறுவனம் இந்திய அரசுக்கு இன்வாய்ஸ் அனுப்பியுள்ளது. விக்னேஷின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான செலவுகளை ஏற்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏற்க முன்வந்துள்ளது. ஜமைக்காவில் விக்னேஷ் வேலை பார்த்த நிறுவனத்திடம் உடலை அனுப்பும் செயல்பாடுகளை மேற்கொள்ளவும் அதற்குரிய செலவுத்தொகையினை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தந்து விடுவதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால், இந்திய அரசிடம் பணம் வருவதற்கு கால தாமதமாகும் என்ற தயக்கத்தில் விக்னேஷ் வேலை பார்த்த நிறுவனம் உடலை அனுப்பும் ஏஜன்சிக்கு பணத்தை செலுத்தாமல் உள்ளது. உடலை கொண்டு வரும் செலவுகளுக்கான பணத்தை யார் செலுத்துவது என்ற குழப்பம் நிலவுவதால் 60 நாட்களாகியும் உடலை கொண்டு வர முடியவில்லை. எனவே, விக்னேஷின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவருவதற்கு மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More News >>