மின்வாரிய அலட்சியத்தால் பழுதாகி போன மின்சாதன பொருட்கள்... இராமையன்பட்டி மக்கள் வேதனை

இராமையன்பட்டி பகுதியில் உள்ள குடியிருப்புகளில் திடீரென ஏற்பட்ட மின்னழுத்தும் காரணமாக வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் அனைத்தும் பழுதானதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

நெல்லை மாவட்டம் இராமையன்பட்டி வடக்கு தெருவில் நேற்று மதியம் திடீரென ஏற்பட்ட உயர் மின்னழுத்தம் காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகளில் இயங்கிக் கொண்டிருந்த ஏசி, டிவி, ஹோம் தியேட்டர், கிரைண்டர், மின்மோட்டார், மின்சார விளக்குகள் என மின்சார பொருட்கள் அனைத்தும் பழுதானது. அந்தப் பகுதியில் உள்ள சுமார் 15 வீடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் சாலையில் திரண்டனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது , திடீரென வீட்டில் உள்ள கிரைண்டர், ஏசி, மின்மோட்டார் போன்றவை எரிந்து கருகிய வாடை வந்தது. அந்த சமயத்தில் வீட்டில் இயங்கி கொண்டிருந்த அனைத்து மின்சாதன பொருட்களும் பழுதானது. இதுகுறித்து மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்தவுடன், அப்பகுதியில் மின் இணைப்பை துண்டித்தனர்.

எனினும், மின்வாரிய அதிகாரிகளோ, ஊழியர்களோ இதுவரை எங்கள் பகுதிக்கு ஆய்வுக்கு வரவில்லை. நாங்கள் மிகவும் எளிமையானவர்கள். கஷ்டப்பட்டு உழைத்து சிறுக சிறுக சேமித்து வாங்கிய பொருட்கள் ஒரே நாளில் பழுதாகி போனது, மிகுந்த வேதனை அளிக்கிறது. மின்சாரத் துறையின் அலட்சியத்தால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்'என்றனர்.

More News >>