நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு:பரபரப்பான சூழலில் தமிழக மாணவர்கள்
நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடக்க உள்ள நிலையில் தேர்வு எழுதுவதற்காக சுமார் 1500 மாணவர்கள் பெரும் இன்னல்களுடன் வெளி மாநிலங்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.
மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் கட்டாயம் நீட் தேர்வு எழுத வேண்டும் என்று கடந்த 2016ம் ஆண்டு முதல் மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதைதொடர்ந்து, கடந்த ஆண்டு முதல் முறையாக நீட் தேர்வு நடைபெற்றது. இரண்டாவது முறையாக நீட் தேர்வு நாளை (06.05.2018) நாடு முழுவதும் நடைபெறுகிறது.
சிபிஎஸ்இ பொறுப்பேற்று எடுத்து நடத்தும் இந்த தேர்வை நாடு முழுவதும் 13 லட்சத்து 26 ஆயிரத்து 725 மாணவ மாணவிகள் எழுதுகின்றனர். இவர்களுக்காக, நாடு முழுவதும் 136 நகரங்களில் 2225 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் மட்டும் நீட் தேர்வை 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். இதில், 1 லட்சத்து 7480 பேர் மட்டுமே தமிழ் நாட்டுக்குள் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். இதில், சென்னை உள்பட 10 நகரங்களில் 170 தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சுமார் 1500 மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாட்டுக்குள் தேர்வு மையத்தை ஒதுக்க முடியவில்லை. இதனால், 1500 மாணவர்கள் தேர்வு எழுத வெளி மாநிலங்களுக்கு புறப்பட்டு உள்ளனர்.
தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், தேர்வு எழுத விரும்பும் இடம் குறித்து முதல் மூன்று இடங்கள் கேட்கப்பட்டிருந்தது. இதில், மாணவர்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் வெளிமாநிலங்களை தேர்வு செய்ய வேண்டும். இதனால், தமிழ்நாட்டில் தேர்வு மையம் கிடைக்காத மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையம் கிடைத்துள்ளது.
இந்த 1500 மாணவர்கள் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான் உள்பட மராட்டியம், தெலுங்கானா, அரியானா, சிக்கிம் மாநிலங்களில் தமிழக மாணவர்களுக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கியதற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
வெளிமாநிலங்களுக்கு சென்று நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளார். பேருந்து அல்லது ரயில் கட்டணம் அல்லாமல் ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.1000 வழங்க உத்தரவிட்டுள்ளார்.
கேரளாக்கூட பரவாயில்லை. ராஜஸ்தானுக்கு செல்லும மாணவர்கள் 36 மணி நேரத்திற்கு முன்பே ரயிலில் கிளம்ப வேண்டும். கண்டிப்பாக, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வாய்ப்பில்லாததால் முன்பதிவு இல்லாத பெட்டியில் மாணவர்கள் பயணிக்க வேண்டும்.
இதுவே அவர்களுக்கு பெரும் அலைச்சலாக இருக்கும். இதை தவிர, உணவு, தங்கும் செலவு, உடன் செல்வோருக்கான செலவு என பல பிரச்னைகளை தமிழக மாணவர்கள் சந்திள்ளனர். பெரும் இன்னல்களுடன் தமிழக மாணவர்கள் தேர்வு எழுத வேண்டிய சூழ்நிலை இம்முறை ஏற்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com