சொந்தக் கட்சியின் ஊழலை அம்பலப்படுத்திய சேரன்மகாதேவி திமுக கவுன்சிலர்: பேரூராட்சி முறைகேடுகள் குறித்து பரபரப்பு வீடியோ
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பேரூராட்சி, ஆளும் திமுகவின் கைவசம் உள்ள நிலையில், அதே கட்சியைச் சேர்ந்த மூத்த கவுன்சிலர் ஒருவர், பேரூராட்சி நிர்வாகத்தில் தலைவிரித்தாடும் ஊழல், நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் அதிகாரிகளின் மெத்தனப் போக்கைக் கண்டித்து வெளியிட்டுள்ள வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
*யார் இந்த திமுக கவுன்சிலர்?*
சேரன்மகாதேவி பேரூராட்சி 15வது வார்டு உறுப்பினராக இருப்பவர் திமுகவைச் சேர்ந்த ர. தங்கராஜ். இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல், இப்பகுதி மக்களால் மூன்று முறை தொடர்ச்சியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 15 ஆண்டுகளுக்கும் மேலாக கவுன்சிலராக உள்ளார். திமுகவின் மூத்த உறுப்பினரான இவரே, தற்போது தனது கட்சியின் பேரூராட்சி நிர்வாகம் பற்றி பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.
முறைகேடுகள் குறித்து பேரூராட்சி மண்டல இயக்குநருக்கு அவர் கடிதமும் எழுதியுள்ளார். அதில், கூறியிருப்பதாவது
*செயல் அலுவலரின் மெத்தனப்போக்கு: பேரூராட்சி செயல் அலுவலர் (EO) மாதம் 30,000 ரூபாய் சம்பளம் பெற்றுக் கொண்டு, மாதத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே பணிக்கு வருகிறார். ஆனால், அவருக்காக பயணப்படி 15,000 ரூபாயும், வாகன பழுதுபார்ப்புச் செலவு 3,000 ரூபாயும் வழங்கப்படுகிறது. இதனால், அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமராவை ஆப் செய்து வைத்துள்ளார்.
* ஊழல் மற்றும் லஞ்சம்: குடிநீர்க் குழாய் பதிப்பது, துப்புரவுப் பணிகள் போன்ற டெண்டர்களில் ஒப்பந்தக்காரர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு, தரமற்ற பணிகளுக்கு செயல் அலுவலர் ஒப்புதல் அளிக்கிறார். மேலும், துப்புரவுப் பணியாளர்கள் சரியாகப் பணிக்கு வராததை மேற்பார்வையாளர்கள் லஞ்சம் பெற்றுக்கொண்டு மறைப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
* அடிப்படை வசதிகள் புறக்கணிப்பு: கடந்த இரண்டு ஆண்டுகளாக கழிவுநீர்ச் சாக்கடைகள் முறையாகத் தூர்வாரப்படவில்லை. இதனால் டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்கள் பரவி வருகின்றன. பல பகுதிகளில் குடிநீர்க் குழாய் உடைப்புகள் சரிசெய்யப்படாமல், மக்கள் கையடி பம்புகளை நம்பியுள்ளனர்.
* மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்: தன்னிச்சையாகச் செயல்படும் செயல் அலுவலர், மக்கள் பிரதிநிதிகளான கவுன்சிலர்களையும், பொதுமக்களையும் மிரட்டி வருகிறார். அவரைக் கேள்வி கேட்டால், "கோர்ட்டுக்குச் சென்று வருகிறேன்" எனப் பொய் சொல்லித் தப்பிக்கிறார்.
* நீண்டகாலப் பிரச்சினைகள்* கங்கையான் மேட்டுத் தெருவில் இருந்து 15, 16வது வார்டுகளுக்குச் செல்லும் பாலம் கட்டும் பணி 2001 ஆம் ஆண்டு முதல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத அளவுக்குப் பல தெருக்களில் பாதை வசதியில்லை.
இவ்வாறு அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.
*அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு:*
ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒரு மூத்த கவுன்சிலரே, தனது கட்சியின் பேரூராட்சியின் நிர்வாகச் சீர்கேடுகளை ஆதாரங்களுடன் பொதுவெளியில் அம்பலப்படுத்தியிருப்பது, திமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதில் தலையிட்டு, செயல் அலுவலர் மீதும், புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றவர்கள் மீதும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.