நெல்லை தனியார் கல்லூரி சமையல் அறையில் அழுகி கிடந்த காய்கறிகள் துர்நாற்றத்தால் மயக்க நிலைக்கு சென்ற அதிகாரிகள்
திருநெல்வேலி அருகே மாணவர்கள் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தனியார் பொறியியல் கல்லூரி விடுதியின் சமையலறை உரிமத்தை, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ரத்து செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் திடியூரில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி ஒன்று உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். சமீபத்தில், இக்கல்லூரி விடுதியில் தங்கியிருந்த 8 மாணவர்களுக்கு மர்மக் காய்ச்சல் ஏற்பட்டது. ரத்த மாதிரிகளைப் பரிசோதித்ததில், விலங்குகளின் சிறுநீர் மூலம் பரவக்கூடிய லெப்டோஸ்பைரோசிஸ் எனும் எலிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியானது. உடனடியாக, களத்தில் இறங்கிய மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், தொற்றுக்கான மூல காரணத்தைக் கண்டறிய தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, கல்லூரி நிர்வாகம் அருகேயுள்ள ஓடையில் இருந்து நேரடியாகத் தண்ணீரை எடுத்து, உரிய முறையில் சுத்திகரிக்காமல் பயன்படுத்தியதே மாணவர்களின் உடல்நலக்குறைவுக்குக் காரணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மறு உத்தரவு வரும் வரை கல்லூரியை மூட மாவட்ட சுகாதாரத்துறை உத்தரவிட்டது.
இதன் தொடர்ச்சியாக, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கல்லூரி சமையலறையில் சிறப்பு ஆய்வை மேற்கொண்டனர். அந்த ஆய்வில், அடிப்படை சுகாதாரம் இல்லாமல் சமையலறை மோசமான நிலையில் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சமையலறைக்குள் பூச்சிகளும் , பூனைகளும் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்துள்ளன. இட்லி மாவு அரைத்து வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களில் பூஞ்சை படர்ந்திருந்தது.
சமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த மூலப்பொருட்கள் சுகாதாரமற்ற முறையில் தரையில் கிடந்தன. மேலும், காய்கறிகள் சேமிப்பு அறையை ஆய்வு செய்தபோது, அங்கு அழுகிய காய்கறிகள் குப்பையைப் போல் குவிக்கப்பட்டிருந்ததும், அந்த அறையே கடும் துர்நாற்றம் வீசியதும் அதிகாரிகளைக் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதையடுத்து உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் கீழ், கல்லூரி விடுதி சமையலறைக்கு வழங்கப்பட்ட FSSAI உரிமத்தை உடனடியாக ரத்து செய்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். பாதுகாப்பான குடிநீர் ஆதாரத்தை ஏற்படுத்துதல், தண்ணீர் தொட்டிகளை முழுமையாகச் சுத்தம் செய்தல், சுகாதாரமற்ற சமையலறையை முழுமையாக இடித்து நவீனப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இரு துறை அதிகாரிகளும் மீண்டும் ஆய்வு செய்து திருப்தி அடைந்த பின்னரே கல்லூரி மற்றும் சமையலறை மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படும் . இதற்கிடையே, எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பியுள்ளனர்.