மாணவிக்கு பாலியல் சீண்டல்... பேராசிரியர் சஸ்பென்ட் : சேரன்மாகாதேவி ஸ்காட் கல்லூரியில் மாணவர்கள்கொந்தளிப்பு

சேரன்மகாதேவியில் உள்ள ஸ்காட் பொறியியல் கல்லூரியில், மாணவி ஒருவருக்குப் பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் புகாரில், அவரைக் கண்டித்த மாணவர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ள சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கண்டித்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி வளாகத்திற்குள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

*சுற்றுலாவில் சில்மிஷம்*

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் உள்ள ஸ்காட் (SCAD) பொறியியல் கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை (ECE) சார்பில், மாணவர்களை கேரள மாநிலம் மூணாறுக்கு தொழில்துறை களப்பயணமாக (Industrial Visit) அழைத்துச் சென்றுள்ளனர். இந்தச் சுற்றுலாவின்போது, உடன் சென்றிருந்த பேராசிரியர் ஜான் சாமுவேல்ராஜ் என்பவர், மாணவி ஒருவரிடம் பாலியல் ரீதியாகச் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

*பேராசிரியர் மீது தாக்குதல்?*

இந்த விவகாரம் சக மாணவர்களுக்குத் தெரியவரவே, அவர்கள் கொந்தளித்தனர். சுற்றுலா முடிந்து கல்லூரிக்குத் திரும்பியதும், இதுகுறித்து மாணவர்கள் நேற்று பேராசிரியரிடம் தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியதாகத் தெரிகிறது. இதில், பேராசிரியர் ஜான் சாமுவேல்ராஜ் தாக்கப்பட்டுக் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

* மாணவர்கள் மீது வழக்கு*

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கல்லூரி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், சேரன்மகாதேவி காவல்துறையினர் நேற்று நள்ளிரவு, போராட்டத்தில் ஈடுபட்ட 5 மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல், நியாயம் கேட்ட மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது, சக மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

*உள்ளிருப்புப் போராட்டம்*

இதையடுத்து, நூற்றுக்கணக்கான மாணவர்கள் இன்று வகுப்புகளைப் புறக்கணித்து, கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கினர். மேலும், மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகளை நிர்வாகம் ஒரு தனி அறையில் அடைத்து வைத்துப் போராட்டத்தைத் தடுக்க முயற்சிப்பதாகவும் மாணவர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்:

* குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர் ஜான் சாமுவேல்ராஜை உடனடியாக நிரந்தரமாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும்.

* பேராசிரியரைக் கைது செய்து, அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.* பாதிக்கப்பட்ட மாணவிக்கு நியாயம் கேட்ட 5 மாணவர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்கை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

இந்தக் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள் அறிவித்துள்ளனர்.

இதனிடையே, மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, கல்லூரி நிர்வாகம் பேராசிரியர் ஜான் சாமுவேல்ராஜை தற்காலிகமாகப் பணிநீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், மாணவர்கள் தங்களது கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தால் கல்லூரி வளாகத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

4 மாணவர்கள் கைது?

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி (scad ) தனியார் கல்லூரியில், மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்ட உதவி பேராசிரியரை மாணவர்கள் தாக்கிய விவகாரம் தொடர்பாக 4 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

More News >>