தூண்டில் வளைவு அரைகுறை பணியால், திரேஸ்புரம் மீனவர்கள் கொந்தளிப்பு

திரேஸ்புரத்தில் கடற்கரை பகுதியில் தூண்டில் வளைவு முழுமையாக அமைத்து தராத மீன்வளத்துறையை கண்டித்து வரும் அக்டோபர் 23ஆம் தேதி மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக, நாட்டுப் படகு மீன்பிடிச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 1200 நாட்டுப் படகுகள் மூலம் சுமார் 10,000 மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடல் பகுதியில் ஏற்பட்ட கடல் சீற்றம் உள்ளிட்ட இயற்கை சீற்றம் காரணமாக நாட்டுப் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி கடும் சேதம் அடைந்தன. இதைத் தொடர்ந்து , திரேஸ்புரம் நாட்டு பகுதியில் கடற்பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கடந்த 2006 ஆம் ஆண்டு திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இரண்டு பகுதிகளாக தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டன. இதில் ஒரு பகுதி 1050 மீட்டர் தூரம் வரையும் மற்றொரு பகுதி 538 மீட்டர் தூரம் வரையும் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. பொதுப்பணித்துறை சார்பில் தூண்டில் வளைவும் அமைக்கப்பட்டது. ஆனால் , 538மீட்டர் அமைக்க வேண்டிய இடத்தில் சுமார் 250 மீட்டர் மட்டுமே தூண்டில் வளைவு போடப்பட்டு , மீதி 285 மீட்டர் அமைக்கப்படவில்லை.

தூண்டில் வளைவு முழுமையாக அமைக்கப்படாததால் தொடர்ந்து நாட்டுப் படகுகள் இயற்கை சீற்றத்தின் போது மற்றும் காற்று அதிகமாக அடிக்கும் போது ஒன்றோடு ஒன்று மோதி சேதமாகி வருகின்றன. இதனால், ஆண்டுக்கு ஒரு படகிற்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது

விடுபட்ட 285 மீட்டர் தூண்டில் வளைவை உடனடியாக அமைக்க வேண்டுமென தமிழக அரசு மீன்வளத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றில் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

இதைத்தொடர்ந்து , இன்று தூத்துக்குடியில் கிரேஸ்புரம் மீன் ஏல கூட்டத்தில் திரேஸ்புரம் அனைத்து நாட்டு படகு மீனவர்கள் கூட்டமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றது இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர் . கூட்டத்தில் தமிழக அரசு மற்றும் மீன்வளத்துறை இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு உடனடியாக , தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதற்காக, வரும் 23ஆம் தேதி 1200 நாட்டுப் படகு மீனவர்களும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

More News >>