மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வசதி பேருந்து : நெல்லையில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்
மாற்றுத்திறனாளிகள் எளிதாக ஏறி இறங்கும் வகையிலான சிறப்பு தாழ்தள சொகுசு பேருந்து சேவையை நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்திலிருந்து பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் தொடங்கி வைத்தார்.
வயதுமுதிர்ந்தோர், பெண்கள் மற்றும் குழந்தைகள் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் ஏறி இறங்க வசதியாக சிறப்பு அம்சங்கள் கொண்ட தாழ்தள சொகுசு பேருந்துகள் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பெரு நகரங்கள் இயக்கப்பட்டு வந்தது . தொடர்ந்து, இந்த பேருந்து நெல்லையிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பேருந்து சேவையின் தொடக்க விழா இன்று( அக்13) நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. நெல்லை மத்திய திமுக மாவட்ட பொறுப்பாளரும் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் வகாப் கலந்து கொண்டு புதிய பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நெல்லை சந்திப்பிலிருந்து ஆலங்குளத்திற்கு இரண்டு பேருந்துகளும், ஸ்ரீரவைகுண்டத்திற்கு இரண்டு பேருந்துகளும், புதிய வழித்தடங்களில் நான்கு பேருந்துகள் என 8 பேருந்துகளின் சேவை தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியில் துணை மேயர் ராஜு மாநகராட்சி மண்டல தலைவர்கள் மகேஸ்வரி, ரேவதி பிரபு, மத்திய மாவட்ட துணை செயலாளர் எஸ்.வி.சுரேஷ், தர்மர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.