திருநெல்வேலி ஜங்ஷன் வெள்ளத்தில் மூழ்கும் - மாநகராட்சி மீது முன்னாள் மேயர் புவனேஸ்வரி பகீர்
திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் ஒவ்வொரு மழைக்காலத்திலும் வெள்ளத்தில் மூழ்குவதற்கு, அங்குள்ள ஓடை ஆக்கிரமிக்கப்பட்டுப் பாதியில் நிறுத்தப்பட்ட சீரமைப்புப் பணிகளே காரணம் என்று திருநெல்வேலி மாநகராட்சியின் முன்னாள் மேயரும், பாஜக பிரமுகருமான புவனேஸ்வரி குற்றம்சாட்டியுள்ளார்.
திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் அருகே ஓடை அருகே நின்று அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,
"திருநெல்வேலி பேருந்து நிலையம் வெள்ளத்தில் மூழ்குவதற்குக் காரணமாக இருப்பது இந்த ஓடைதான். ஒரு வருடமாகியும் இந்த ஓடையின் சீரமைப்புப் பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த ஓடையின் மீது பல கடைகள் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், ஓடையை அகலப்படுத்துவதற்குப் பதிலாக, மேலும் குறுக்கிக்கொண்டே சென்றால் தண்ணீர் எப்படிப் போகும்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
ஓடையில் குப்பைகள் தேங்குவதைத் தடுப்பதற்காகத் தடுப்பான்கள் அமைக்கப்பட வேண்டும். தடுப்பான்கள் இல்லாததால், குப்பைகள் அடைத்து விடுகின்றன. இந்த ஓடை வரகநேரி முக்கு வழியாகச் சென்று, கெட்வெல் ஆஞ்சநேயர் மருத்துவமனைக்குப் பின்னால் உள்ள ஓடையில் கலந்து, தாமிரபரணி ஆற்றில் கலக்க வேண்டும். ஆனால், அனைத்து இடங்களிலும் ஆக்கிரமிப்புகளால் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
"வருமுன் காப்பதே சிறந்தது. ஆனால், திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மீண்டும் பேருந்து நிலையம் வெள்ளத்தில் மூழ்கும். இதனால், பொதுமக்களும், வியாபாரிகளும் கடும் நஷ்டத்தைச் சந்திப்பார்கள். இது என்ன சாபக்கேடா? கடந்த ஆண்டு ஒருவர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார். அதே போன்ற ஒரு துயரச் சம்பவம் மீண்டும் நடந்துவிடக் கூடாது . சாமானிய மக்கள் சார்பாகவும், பொதுமக்கள் சார்பாகவும், வியாபாரிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் சார்பாகவும் இந்தக் கோரிக்கையை மாநகராட்சி ஆணையருக்கு சமர்ப்பிக்கிறேன்," என்று அவர் கூறினார்.