குளத்தில் அறுந்து கிடந்த மின்கம்பி: அறியாமல் மாடுகளுக்கு தண்ணீர் காட்டிய விவசாயி கதறல்

ராதாபுரம் அருகே பெய்த மழையின்போது குளத்தில் அறுந்து விழுந்த மின்கம்பி குறித்து அறியாமல், விவசாயி ஒருவர் தனது மாடுகளுக்கு தண்ணீர் காட்டிய போது, அவை மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தன.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகேயுள்ள சமூகரெங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அண்ணாமலை முருகன் தனது இரண்டு பசு மாடுகளை வழக்கம் போல் அப்பகுதியில் உள்ள குளத்திற்கு தண்ணீர் குடிக்க அழைத்துச் சென்றுள்ளார். அப்போது , பெய்த மழையின் காரணமாக, குளத்தின் குறுக்கே சென்ற மின்கம்பி திடீரென அறுந்து விழுந்தது. இதை அறியாத அண்ணாமலை முருகன் குளத்தில் மாடுகளை தண்ணீர் குடிக்க வைத்த போது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தன. தனது கண் முன்னே மாடுகள் சரிந்ததைக் கண்ட விவசாயி கதறி அழுதது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.

மழைக்காலங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுவது தொடர்கதையாகி வருகிறது. இது போன்ற விபத்துகளைத் தடுக்க, மின்சார வாரியம் மழைக்காலத்திற்கு முன்பாகவே ஒரு சிறப்புத் திட்டத்தை வகுத்து, பழுதடைந்த மற்றும் பலவீனமான மின்கம்பங்கள், தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகள் மற்றும் மரக்கிளைகள் உரசிச் செல்லும் கம்பிகளைச் சீரமைக்க வேண்டும். இத்தகைய முன்னெச்சரிக்கை மற்றும் பராமரிப்புப் பணிகளே மனித உயிர்களையும், கால்நடைகளையும் பாதுகாக்க ஒரே வழி.

பொதுமக்களும், கால்நடை வளர்ப்போரும் மழை நேரங்களில் மின்கம்பங்களுக்கு அருகிலோ, நீர்நிலைகளிலோ செல்வதைத் தவிர்க்க வேண்டும். அறுந்து கிடக்கும் மின்கம்பிகளைக் கண்டால் உடனடியாக *மின்னகம் (94987 94987)* எண்ணிற்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட விவசாயி அண்ணாமலை முருகனுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

More News >>