தீபாவளி பண்டிகை : திருநெல்வேலி மாவட்டத்தில் 1600 போலீசார் குவிப்பு!

தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடுவதற்காக, திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

*1600 போலீசார் குவிப்பு*

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சட்டம் ஒழுங்கு மற்றும் ஆயுதப்படை காவலர்கள், பட்டாலியன் காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 1600 போலீசார் தீபாவளி பாதுகாப்பு பணிக்காக மாவட்டம் முழுவதும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கோவில்கள், பஜார்கள், முக்கிய வீதிகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் நடைபெற்ற குற்ற வழக்குகள் குறித்த தரவுகள் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றின் அடிப்படையில் கூடுதல் பாதுகாப்பு தேவைப்படும் இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல் இருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

*24 மணி நேர ரோந்து*

* மாவட்டத்தின் அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் 45 இருசக்கர வாகனங்கள் மற்றும் 36 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 81 வாகனங்கள் மூலம் போலீசார் *24 மணி நேரமும்* சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.* மேலும், மாவட்டம் முழுவதும் 53 இடங்களில் வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.* இந்தச் சோதனைகளின் போது, சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் வாகனங்கள் மீது தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

*சிசிடிவி, பாடி வோர்ன் கேமராக்கள்*

கூட்ட நெரிசலைக் கண்காணிப்பதற்காக, மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் *சிசிடிவி கேமராக்கள், காவல்துறை சீருடையில் அணியக்கூடிய பாடி வோர்ன் கேமராக்கள் (Body Worn Camera மற்றும் உயரமான *கண்காணிப்பு கோபுரங்கள் (Watch Towers) ஆகியவை அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பட்டாசு விற்பனை மையங்களில் தீயணைப்புத் துறையும் காவல்துறையும் இணைந்து கூட்டாகப் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தியுள்ளன.

*எஸ்.பி. நை. சிலம்பரசன் அறிவுரை*

தீபாவளி பாதுகாப்புப் பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு. நை. சிலம்பரசன்* அவர்கள் கூறியதாவது:

"மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும் பாதுகாப்புடனும் தீபாவளியைக் கொண்டாட காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்களும், காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, அமைதியான முறையில் பண்டிகையைக் கொண்டாட வேண்டும். சட்டம் ஒழுங்கை குலைக்கும் வகையில் எந்த ஒரு செயல் அல்லது முயற்சி நடைபெறும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது எவ்வித சமரசமும் இல்லாமல் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தங்களது பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது பொருட்கள் இருப்பதை கவனித்தால், உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

More News >>