பாசமிகு ஆட்டுக்குட்டியுடன் பைக் வாங்க வந்த விவசாயி: நெல்லையில் நெகிழ்ச்சி சம்பவம்

திருநெல்வேலியில் விவசாயத் தம்பதியினர், தாங்கள் பாசமாக வளர்க்கும் செம்மறி ஆட்டுக்குட்டியுடன் வந்து புதிதாக இருசக்கர வாகனம் வாங்கிச் சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான, வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம், நடுவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த விவசாயி முத்து குமரன் . இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதி புதிய இருசக்கர வாகனம் வாங்குவதற்காக நெல்லை வண்ணாரப்பேட்டையிலுள்ள ஷோரூம் ஒன்றுக்கு வந்திருந்தனர். விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் ஆடு, மாடுகள் மீது கிராமப்புற மக்களுக்கு எப்போதும் தனிப் பாசம் உண்டு. அநத பாசத்தின் வெளிப்பாடாக, இந்தக் கணவன்-மனைவி இருவரும் தாங்கள் பாசமாக வளர்த்து வரும் ஆட்டுக்குட்டி ஒன்றையும் கூடவே அழைத்து வந்திருந்தனர்.

புதிய வாகனத்தை வாங்கும் நடைமுறைகள் நடந்துகொண்டிருந்தபோது, ஆட்டுக்குட்டியும் தனது உரிமையாளர்கள் பின்னால் ஷோரூமில் அங்குமிங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தது. அனைத்து ஆவணங்கள் மற்றும் பணப்பரிமாற்றம் முடிந்த பிறகு, புத்தம் புதிய இருசக்கர வாகனத்தைப் பெறும் தருணம் வந்தது. அப்போது, தம்பதியினர் ஓர் அழகான செயலைச் செய்தனர். தாங்கள் புதிய இருசக்கர வாகனத்தின் மீது ஆட்டுக் குட்டியை அன்புடன் நிற்க வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தம்பதியரின் இந்தச் செயல், அவர்கள் தங்கள் உழைப்புக்கும், பாசமாக வளர்க்கும் கால்நடைகளுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைந்தது.இந்த நெகிழ்ச்சியான காட்சியை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர, அது வைரலாகி வருகிறது.

More News >>