காரப்பேட்டை நாடார் மகமையில் நடப்பது என்ன? -பகீர் கிளப்பும் பள்ளி செயலாளர்!

தூத்துக்குடியில் காரப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று பள்ளிச் செயலாளர் எம்.ஜி.எம். ரமேஷ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி, அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் . இதைத் தொடர்ந்து பள்ளி செயலாளர் வழக்கறிஞர் எம் .ஜி . எம் ரமேஷ் தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் .அப்போது அவர் கூறியதாவது,

"தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நீதிமன்ற உத்தரவுப்படி, செயலாளராக செயல்பட்டு வருகிறேன் . நான் செயலாளராக பொறுப்பேற்றவுடன் பள்ளியில் நடைபெற்ற சீர்கேடுகளுக்கு முடிவு கட்டினேன். மாணவர்களுடைய தேர்ச்சி சதவீதம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் 70 சதவீதமாக இருந்தது. இதை சீர் செய்ய பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு சில அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன .பல்வேறு திறன் பயிற்சிகள் மற்றும் சிறப்பு வகுப்புகள் ஆகியவை நடத்தப்பட்டது. தற்போது 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் 99 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் உயர்ந்துள்ளது . பள்ளியின் மைதானம் மற்றும் சோதனை கூடங்கள் ஆகியவை சீரமைக்கப்பட்டு மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாற்றப்பட்டது. பள்ளியில் மதிய உணவு சாப்பிடும் மாணவர்களுக்கு அரசு வழங்கும் நிதியுடன் சேர்த்து கூடுதல் பணம் செலவழித்து, தினமும் ஊட்டச்சத்துமிக்க உணவுகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் நலன் சார்ந்தே அனைத்து பணிகளும் நடைபெற்றது .

இந்த நிலையில், சில ஆசிரியர்கள் பள்ளி வேலை நேரத்தில் ஆன்லைன் டிரேடிங்கில் ஈடுபடுவதும், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது. தொடர்ந்து பள்ளி வேலை நேரத்தில் ஆசிரியர்கள் தங்கள் செல்போனை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்துவிட சொன்னோம். முக்கிய அழைப்புகளுக்காக, பள்ளி தொலைபேசிக்கு போன் செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தினோம் . மாணவர்கள் வருவதற்கு முன்பாக ஆசிரியர்கள் பள்ளியில் இருக்க வேண்டும் . அதனடிப்படையில், ஆசிரியர்கள் வருகையை பதிவு செய்ய பயோமெட்ரிக் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக ஆசிரியர்களுக்கு என் மேல் அதிருப்தி ஏற்பட்டது . கடந்த நிர்வாகத்தினர் இருக்கும்போது ஆசிரியர்கள் பணி நியமனத்தின் போது பணம் பெற்றுக் கொண்டு பணி நியமனம் செய்யப்பட்டது குறித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டது

டெத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் முறையாக பணி செய்யாத ஆசிரியரை பணியை விட்டு நிறுத்தினேன். இவை அனைத்தும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு செய்யப்பட்டது. அப்படி நீக்கப்பட்ட ஆசிரியர் காரப்பேட்டை நாடார் மகமை செயலாளர் விநாயகமூர்த்திக்கு உறவினர் என்பதால் பிரச்னை செய்கின்றனர்.

காரப்பேட்டை நாடார் மகமை கடந்த 15 ஆண்டுகளாக பதிவுத்துறையில் முறையாக பதிவு செய்யப்படவில்லை. இதை, சுட்டிக்காட்டி பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க கூறினேன் . இதன் காரணமாக நிர்வாகத்தில் உள்ளவர்கள் இடையே கருத்து வேறுபாடு உருவானது . இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. மேலும் கடந்த மூன்று ஆண்டுகளாக காரப்பேட்டை நாடார் மகமை செயலாளர் விநாயகமூர்த்தி புதிதாக எந்தவித உறுப்பினர்களையும் சேர்க்கவில்லை.

தற்போது , பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் , அதை மறைத்து தேர்தலை நடத்த முயற்சி செய்கின்றனர் . பதிவுத்துறையில் அங்கீகாரம் செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு முறையாக தேர்தலை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினேன். தற்போது எனது பதவி காலம் முடிந்த நிலையில் , தேர்தல் நடைபெற்று புதிய நிர்வாகிகள் பதவியேற்கும் வரை பழைய நிர்வாகிகள் தொடர்ந்து,செயல்படுவார்கள் என்பது விதி . அதனடிப்படையில், நான் செயல்பட்டு வருகிறேன். ஆனால், தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக என்னை பதவியில் இருந்து நீக்க வேண்டும் காரப்பேட்டை நாடார் மகமை செயலாளர் விநாயகமூர்த்தி . துணை தலைவர் மகேந்திரன் உள்ளிட்ட சிலர் செயல்பட்டு வருகின்றனர் . ''

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

More News >>