மருத்துவத்துறையை சேர்ந்தவர்கள் பதிது புதியாக கற்றுக் கொள்ள வேண்டும்- நெல்லை கருத்தரங்கில் வலியுறுத்தல்
மருத்துவத் துறை சிகிச்சை முறைகள் நிரந்தரமானவை கிடையாது. ஒவ்வொரு நாளும், ஏன் ஒவ்வொரு நிமிடமும் புதிய கண்டுபிடிப்புகளும், நவீன சிகிச்சை முறைகளும் அறிமுகமாகி வருகின்றன. இந்த மாற்றங்களை மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் உடனுக்குடன் தெரிந்துகொள்வது நோயாளிகளுக்கு சிறந்த சேவையை வழங்க இயலும்" என நெல்லையில் நடந்த கருத்தரங்கில் மருத்துவ நிபுணர்கள் அறிவுரை வழங்கினர்.
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மற்றும் இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் (API) திருநெல்வேலி கிளை இணைந்து நடத்தும், பொது மருத்துவம் குறித்த இரண்டு நாள் அகில இந்திய அளவிலான கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம் ("Medicine Update - 2025") தொடங்கியது.
இந்தக் கருத்தரங்கின் தொடக்க விழா, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் . ரேவதி பாலன் தலைமையில் நடைபெற்றது. கருத்தரங்குக்கு தமிழ்நாடு பொது மருத்துவத் துறையின் முன்னாள் தலைவர் டாக்டர் அஷ்ரஃப் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் திருநெல்வேலி கிளைத் தலைவர் டாக்டர் ஏ.எஸ். மோகன் பேசுகையில், "திருநெல்வேலி மாவட்ட பொது மருத்துவர்கள் சங்கம் மற்றும் மருத்துவக் கல்லூரியின் மருத்துவத் துறை சார்பில் இந்த தொடர் மருத்துவக் கல்வி நிகழ்ச்சியை (CME) கடந்த 17 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். இதன் மூலம், மருத்துவத் துறையில் ஏற்படும் புதிய கண்டுபிடிப்புகள், நவீன சிகிச்சை முறைகள் மற்றும் புதிய மருந்துகள் குறித்த தகவல்களை மருத்துவர்களுக்கும், மருத்துவ மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்கிறோம்," என்றார்.
*நவீன சிகிச்சை முறைகள் குறித்து விவாதம்*
இந்த இரண்டு நாள் நிகழ்வில், முதல் நாளான இன்று கருத்தரங்கமும், நாளை பயிலரங்கமும் நடைபெறுகிறது. இந்தக் கருத்தரங்கில் இதயம், நரம்பியல், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் குடல் நோய்களுக்கான நவீன சிகிச்சை முறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக,* பக்கவாதம் (Stroke): மூளையில் ஏற்படும் அடைப்புகளை மருந்துகள் மூலமின்றி, நவீன கருவிகள் (Interventional methods) மூலம் சரி செய்வது.
* இதய செயலிழப்பு (Heart Failure):மாரடைப்புக்குப் பிறகு இதயத்தைச் சரிசெய்வதற்கான நவீன சிகிச்சைகள்.
* பிற துறைகள்: கல்லீரல், சிறுநீரகம் மற்றும் தொடர்பான நோய்களுக்கான சிகிச்சைகள் குறித்தும் துறை சார்ந்த வல்லுநர்கள் உரையாற்றினர்.
*தென்மாவட்ட மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்பு*
இந்தக் கருத்தரங்கில், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் (இளநிலை மற்றும் முதுநிலை) கலந்துகொண்டு தங்களின் அனுபங்களைப் பகிர்ந்துகொண்டதுடன், நவீன மருத்துவ நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டனர்.
சங்கத்தின் செயலாளர் டாக்டர் சுப்பிரமணியன் கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்வைத் தொடர்ந்து நடத்துவதன் மூலம், மருத்துவர்களும் மாணவர்களும் தங்களை மேம்படுத்திக்கொண்டு, நோயாளிகளுக்குச் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க முடிகிறது," என்றார்.
இந்த நிகழ்வில், மருத்துவக் கல்லூரி மருத்துவத் துறைப் பேராசிரியர் டாக்டர் ரத்னகுமார் உள்ளிட்ட முக்கிய மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.