உன் தந்தைக்கு நடந்ததுதான், உனக்கும் நடக்கும் - மிரட்டும் கும்பலால் கலங்கி நிற்கும் கொல்லப்பட்ட பிஜிலி மனைவி

கணவரை கொன்றவர்கள், மகனையும்  கொலை செய்லதாக மிரட்டுகிறார்கள் என நெல்லையில் கொலை செய்யப்பட்ட  ஓய்வு பெற்ற எஸ்ஐ - யின் மனைவி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

நெல்லை, டவுன் பகுதியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் பிஜிலி (60). ஒய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். இவர் நெல்லை டவுனிலுள்ள மசூதியிர்  முத்தவல்லியாக இருந்தார். இதனால் , வக்பு நிலம் தொடர்பாக பிஜிலிக்கும் மற்றோரு தரப்புக்கும் முன்விரோதம் இருந்தது. எதிர் தரப்பு கொலை மிரட்டல் விடுப்பதாக பிஜிலி வீடியோ வெளியிட்ட சில நாட்களில்  அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை  ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக போலீசார் 5 பேரை கைது செய்தனர். இதில் முக்கிய நபரான முகமது தவுபிக் என்ற கிருஷ்ணமூர்த்தியை போலீசார் சுட்டு பிடித்தனர். இந்நிலையில் , இந்த கொலை வழக்கில் கைதானவர்கள் ஜாமீனில் வெளியே வந்து மீண்டும், தனது மகனுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக கொல்லப்பட்ட பிஜிலியின் மனைவி அஜிஜூன்னிஷா (53) பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில் கூறியிருப்பதாவது, 

"தமிழக முதல்வருக்கு வணக்கம். கடந்த மார்ச் 18-ம் தேதி என்னுடைய கணவர் ஜாகீர் உசேன் படுகொலை செய்யப்பட்டார். அவருடைய மனைவிதான் பேசுகிறேன். நீங்கள் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருப்பேன் பேசுகிறீர்கள் .  நான் பார்த்திருக்கேன். இப்போது எங்களுக்கு என்ன பாதுகாப்பு கொடுக்கப் போகிறீர்கள்?ஏனென்றால், என் கணவருக்கு நடந்த மாதிரிதான் என் மகனுக்கும் மிரட்டல் வந்துள்ளது. என் மகன் பள்ளிவாசலுக்குப் போகும்போது, உன் அப்பாவை கொலை  செய்த மாதிரி உன்னையும் கொல்ல  போகிறேன்' என்று பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.  இதுகுறித்து நாங்கள் போலீஸ் துணை கமிஷனரிடம் குடும்பத்தோடு சென்று முறையிட்டோம். காவல் அதிகாரிகள் எங்களுக்கு பாதுகாப்பு தருவதாக உறுதியளித்துள்ளனர்.

என் கணவர் கொலை செய்யப்படுவதற்கு முன் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் பலமுறை புகார் அளித்துள்ளார். அப்போது , நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சஸ்பென்ட்  இன்ஸ்பெக்டர் ஒருவர் மீண்டும் வேலைக்கு வந்துவிட்டார். என் கணவர் போனது போனதுதான். இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் வெளியே சுற்றுகிறார்கள். இந்தக் கொலைக்கு முக்கிய காரணமே நூர்நிஷா என்ற பெண்தான். அவர் பல குடும்பங்களை நாசமாக்கி, லட்சக்கணக்கில் மோசடி செய்தவர். அவருக்கு ஜாமீன் ரத்து செய்யப்பட்டும், இங்கேயேதான் சுற்றிக் கொண்டிருக்கிறார்.

இப்போது எனக்கு மீண்டும் கொலை மிரட்டல் வருகிறது. எந்த துணை இல்லாமல், ஒரு தனியொரு  பெண்ணாக நான் மிகவும் பயந்து போய் இருக்கிறேன். இது ஒரு சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனை. அந்த இடம் வக்ஃபு வாரிய இடமா? அல்லது தனிநபர் சொத்தா?  என்பதை  டிஆர்ஓ விசாரணை நடத்தி தெளிவுபடுத்த வேண்டும். என் கணவர் உயிரைக் கொடுத்ததுதான் மிச்சம். தயவுசெய்து முதலமைச்சர்தான் எங்களுக்குப் பாதுகாப்பு கொடுத்து, நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டும். போலீஸை நம்பிதான் நாங்கள் இருக்கிறோம். எங்களுக்கு நீதி வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்." 

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

More News >>