பெண் டிரைவர்களுக்கு தனி ஆட்டோ ஸ்டாண்ட்: நெல்லை மாநராட்சி குறை தீர்ப்பு கூட்டத்தில் கோரிக்கை
திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், மேயர் ராமகிருஷ்ணன் பொதுமக்களிடமிருந்தும், மாமன்ற உறுப்பினர்களிடமிருந்தும் கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடந்தது. அப்போது, 55-வது வார்டு மாமன்ற உறுப்பினர் முத்து சுப்பிரமணியன் அளித்த மனுவில், கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி பொதுமக்கள் பங்களிப்புடன் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்தில், அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதேபோல், 18-வது வார்டு பகுதி மக்கள் அளித்த மனுவில், தங்கள் பகுதியில் பல மாதங்களாகச் சீரமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள சேதமடைந்த பாதாள சாக்கடையை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் உறவின்முறை மாநிலத் தலைவர் வி.எஸ். முத்துக்குமார் அளித்த மனுவில், வி.எம். சத்திரம் ராமர் கோயில் தெருவில் மாநகராட்சிக்குச் சொந்தமான பொதுப் பாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள இரும்புக் கதவு மற்றும் சுவரை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பெண்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பில் ஜெயஸ்ரீ அளித்த மனுவில், புதிய பேருந்து நிலையம் அருகே தங்களுக்கு எனத் தனியாக ஆட்டோ நிறுத்தம் (ஸ்டாண்ட்) அமைக்க வேண்டும் எனக் கோரினார். பாளையங்கோட்டை மணக்காவலம் பிள்ளை மருத்துவமனை தெருவைச் சேர்ந்த இஸ்மாயில் மைதீன், தங்கள் குடியிருப்புப் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாகச் செயல்படும் இரும்பு மற்றும் கழிவுப் பொருட்கள் கடையை அகற்ற வேண்டும் என்று மனு அளித்தார்.
கைலாசபுரம் பகுதியைச் சேர்ந்த மூக்கையா என்பவர் அளித்த மனுவில், "மாநகராட்சி தொடக்கப் பள்ளி மற்றும் அருகிலுள்ள அம்மா உணவகம் ஆகிய இரண்டிற்கும் பொதுவான ஆழ்துளைக் கிணறு மோட்டாருக்கான மின் இணைப்பு, அம்மா உணவகத்தில் இருந்து வழங்கப்பட்டுள்ளது. இதனால், அம்மா உணவகம் செயல்படாத நேரங்களில், பள்ளிக்குத் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்படுகிறது. எனவே, பள்ளிக்கும், உணவகத்திற்கும் தனித்தனி மின் இணைப்புகள் வழங்க வேண்டும் என்றும், போதுமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய சின்டெக்ஸ் குடிநீர்த் தொட்டிகளை நிறுவ வேண்டும்," என்றும் கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் அளித்த மனுவில், சந்திப்பு பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலையைச் சுற்றியுள்ள இரும்பு வேலியை அகற்றி, அந்தப் பகுதியை அழகுபடுத்தி, பூங்கா மற்றும் நூலகம் அமைத்துத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும், வீரமாணிக்கபுரம் பகுதியைச் சேர்ந்த சற்குணம் என்பவர் வேய்ந்தான்குளம் உபரிநீர்க் கால்வாயைச் சரிசெய்யக் கோரினார்.
தச்சநல்லூரைச் சேர்ந்த முருகன் என்பவர், எக்காளியம்மன் கோயிலில் இருந்து ஸ்ரீபுரம் செல்லும் வழியில் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த மனுக்கள் அனைத்தையும் பெற்றுக்கொண்ட மேயர், அவை மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.