திருநெல்வேலி மாநகராட்சியில் வரி உயர்வு: குளறுபடிகளை தட்டி கேட்பது யார்?
திருநெல்வேலி மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் வருகிற நவம்பர் 10ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், முன்வைக்கப்பட உள்ள சில தீர்மானங்கள் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாநகராட்சி புதிய விதிகளின்படி, குடிநீர் இணைப்புக்கான வைப்புத்தொகை மற்றும் பயனாளர் கட்டணங்கள், பாதாள சாக்கடை கட்டணங்கள் ஆகியவை இனி ஒவ்வொரு ஆண்டும் தானாகவே 3% உயர்த்தப்படும். வரி உயர்வுக்கு ஒவ்வொரு வருடமும் மாமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டிய அவசியமில்லை. இது, மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பு மற்றும் பொதுமக்களின் கருத்துக்களைப் புறக்கணிக்கும் ஒருதலைபட்சமான முடிவு என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வரியை உயர்த்தும் முறை விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. வீட்டின் பரப்பளவை (சதுர அடி) அடிப்படையாகக் கொண்டு, அடுக்கு (Slab) முறையில் வரி விதிக்கப்படும் புதிய முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. பயன்பாட்டின் அடிப்படையில் இல்லாமல், வீட்டின் அளவை மட்டும் வைத்து வரி விதிப்பது ஏற்புடையதல்ல என்று மக்கள் கருதுகின்றனர். உதாரணமாக, ஒரு பெரிய வீட்டில் சில பேரே வசித்தாலும், சிறிய வீட்டில் பல நபர்கள் வசித்தாலும், வீட்டின் பரப்பளவை மட்டுமே கொண்டு வரி விதிக்கப்படும்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட சில பணிகளும் தற்போது கேள்க்குறியாகியுள்ளது. திருநெல்வேலி பேட்டையில் கனரக வாகன முனையத்தில் "ஸ்மார்ட் சிட்டி" நிதியின் கீழ் நிறுவப்பட்ட மூன்று உயர் கோபுர மின் விளக்குகள் (High-mast lights) இயங்கவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது, அவற்றைச் சரிசெய்ய, அதாவது MCB, ELCB மற்றும் கேபிள்களை மாற்றுவதற்காக சுமார் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.
ஏற்கனவே, gpz முடிக்கப்பட்ட உயர் கோபுர மின்விளக்குகள் சில நாட்களிலேயே பழுதடைந்த நிலையில், அந்த திட்டத்துக்கான ஒப்பந்ததாரரைப் பொறுப்பேற்கச் செய்யாமல், மீண்டும் மக்கள் வரிப்பணத்தில் இருந்து புதிய டெண்டர் விடுவது ஏன் ? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
மாநகராட்சியின் 55 வார்டுகளிலும் குப்பைகளைச் சேகரிக்கும் பணி தனியார் ஒப்பந்ததாரரிடம் (ராம்கோ) ஒப்படைக்கப்பட்டுள்ளது. சேகரிக்கப்படும் குப்பையின் எடைக்கு ஏற்ப ஒப்பந்ததாரருக்குப் பணம் வழங்கப்படும். இந்நிலையில், குப்பை சேகரிக்கும் வாகனங்களைக் கண்காணிக்க ஜிபிஎஸ் கருவிகள் பொருத்துவதற்கு மாநகராட்சி நிதி ஒதுக்குவதாகத் தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.
ஏற்கனவே. சுமார் ரூ.5 லட்சம் இதற்கு ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது விடுவிக்கப்பட்ட வாகனங்களுக்காக மேலும் ரூ.49,000 ஒதுக்கப்படுகிறது. குப்பை சேகரிப்புப் பணியை முழுமையாக ஒப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவனமே, வாகனங்களைக் கண்காணிக்கும் ஜிபிஎஸ் கருவிகளையும் தங்களது சொந்தச் செலவில் தான் பொருத்த வேண்டும். அதை விடுத்து, மாநகராட்சி தன் நிதியில் இருந்து செலவு செய்வது தேவையற்றது மற்றும் ஒப்பந்ததாரருக்குச் சாதகமான செயல் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இப்படி, பல்வேறு திட்டங்களில் ஏற்படும் குளறுபடிகளுக்கு யார் பொறுப்பு? நெல்லை மாநகராட்சியை தட்டி கேட்பது யார்? என்பதுதான் இங்கு கேள்வியாக எழுந்து நிற்கிறது.