9 லட்சம் கோடி கடன் , தமிழகத்தின் நிதிநிலை கவலைக்கிடம்! - பாஜக தொழில்துறை பிரிவு தலைவர் கவலை
நெல்லையில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக தொழில் துறை வல்லுநர்கள் பிரிவு ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு பா.ஜ.க தொழில்துறை பிரிவு தமிழக தலைவர் சுந்தர்ராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
"தமிழக பாஜகவின் தொழில் துறை வல்லுநர்கள் பிரிவின் சார்பில் இன்று நெல்லையில் ஒரு முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கமாகக் கொண்டு, அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் தொழில் துறை வல்லுநர்களை (Professionals) பாஜகவில் இணைக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். மருத்துவர்கள், பட்டயக் கணக்காளர்கள் (ஆடிட்டர்கள்), பொறியாளர்கள், கட்டிடக் கலைஞர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை நிபுணர்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களை ஒருங்கிணைத்து கட்சியைப் பலப்படுத்தும் பணி செய்யப்படும்.
மத்திய நிதி அமைச்சர் சமீபத்தில் அறிவித்த 'ஜிஎஸ்டி 2.0' சீர்திருத்தங்கள் குறித்து நாங்கள் இன்று ஒரு காலாண்டு இதழை (Quarterly Journal) வெளியிட்டுள்ளோம். இந்த புதிய சீர்திருத்தம் திடீரென தேர்தலுக்காக கொண்டு வரப்பட்டது அல்ல. இது கடந்த மூன்று ஆண்டுகளாக திட்டமிடப்பட்ட ஒரு நடவடிக்கை. ஜிஎஸ்டி 2017-ல் அறிமுகமானபோது, சராசரி வரி விகிதம் 15.5% ஆக இருந்தது. மத்திய அரசின் திறமையான நிதி மேலாண்மையால், தற்போது இந்த சராசரி வரி விகிதம் 11.5% ஆக குறைந்துள்ளது. இந்த சாதகமான சூழல் ஏற்பட்டதால்தான், சாமானிய மக்கள் தினமும் பயன்படுத்தும் பல்வேறு பொருட்கள் மீதான வரிகளைக் குறைத்து, புதிய சீர்திருத்தத்தை அரசால் கொண்டு வர முடிந்தது. இந்த வரி குறைப்பு மூலம், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 40,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை சேமிப்பு கிடைக்கும் என நாங்கள் கணக்கிட்டுள்ளோம்.
தமிழகத்தின் தற்போதைய நிதிநிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மாநிலத்தின் மொத்த கடன் சுமை 9 லட்சம் கோடியை எட்டியுள்ளது. 2016-ல் சுமார் 10,000 கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறை, இன்று 46,000 கோடியாக, அதாவது ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பிராவிடண்ட் ஃபண்ட் தொகையைக் கட்டுவதில் கூட சிக்கல் நீடிக்கிறது. மாநிலத்தின் இந்த நிதி நெருக்கடி குறித்து விரிவான தகவல்களுடன் பாஜக தொழில்பிரிவு சார்பில் நாங்கள் விரைவில் 'வெள்ளை அறிக்கை' ஒன்றை வெளியிடுவோம். பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால், அதனால் தங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பைக் காரணம் காட்டி, மாநில அரசுகள்தான் அதனை தொடர்ந்து எதிர்த்து வருகின்றன."
இவ்வாறு சுந்தர்ராமன் தெரிவித்தார்.
சந்திப்பின் போது, தொழில் துறை வல்லுநர்கள் பிரிவின் நெல்லை மாவட்ட தலைவர் முத்துக்குமார், வடக்கு மாவட்ட தலைவர் முத்து பலவேசம் ஆகியோர் உடனிருந்தனர்.