மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து கதறிய விவசாயி
நில ஆக்கிரமிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து விவசாயி கதறி அழுத காட்சி பார்ப்பவர்களை கண் கலங்க வைத்தது.
தருமபுரி அருகே தேவர்ஊத்துபள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி தண்டாயுதபாணி .ஆட்டுகாரன்பட்டி அருகே இவருக்கு சொந்தமான 4 ஏக்கர் விவசாயநிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.விரக்தியின் உச்சிக்கு சென்ற அவர், கடந்த சில தினங்களுக்கு முன் குடும்பத்தாருடன் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்தார்.
இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க வந்த தண்டாயுதபாணி மற்றும் அவரது குடும்பத்தார் ஆட்சியர் காலில் விழுந்து கதறினர்.
உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் அவர்களை எழுப்பி சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர்.தருமபுரி நகர காவல்நிலையத்தில் காவல்ஆய்வாளர் ரத்தினகுமார் நிலஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் புகார்மனு அளித்தார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் மலர்விழி விசாரித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.