மீடூ விவகாரம்- ராஜ்நாத் தலைமையில் விசாரணை குழு
மீடூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து, பாலியல் தொல்லை குறித்து விசாரிக்க உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், அமைச்சர்கள் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
மீடூ விவகாரத்தில், ஹாலிவுட் ஹார்வே வெயின்ஸ்டீன் தொடங்கி, பாலிவுட்டில் நானா படேகர், குயின் பட இயக்குநர் என பெரிய பட்டியலே நீண்டது. கோலிவுட் மற்றும் டோலிவுட் பாலியல் புகார்களை ஸ்ரீரெட்டி கூறிய போது கண்டு கொள்ளாத இந்த சமூகம், இன்று சின்மயி, சாண்ட்ரா என பலரும் வெளிப்படையாக கூறுவதை ஆதரித்து வருகிறது.
இதற்கு, சமந்தா, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பெரிய நடிகைகள் ஆதரவு அளிப்பதும் என தற்போது, சினிமாவில் உள்ள வன்மங்கள் மற்றும் பாலியல் தொல்லைகள் வெளியே நாற்றமெடுக்க தொடங்கியுள்ளன. மீடூ புகாரில் வைரமுத்து, அர்ஜுனை அடுத்து நடிகர் பிரசாந்தின் தந்தையும் நடிகரும் இயக்குனருமான தியாகராஜன் மீது ஒரு பெண் புகார் அளித்துள்ளார்.
இந்தியாவில் திரைப்பட துறையில் மீடூ விவகாரம் பிரபலம் அடைந்த நிலையில், பணியிடங்களில் தங்களை பாலியல் தொல்லை செய்த நபர்களின் பெயர்களை பல்வேறு பெண்கள் வெளியிட தொடங்கினர். இதனை தொடர்ந்து பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் பற்றி விசாரிக்க அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.
இந்த குழுவில் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறை அமைச்சர் மேனகா காந்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த குழுவானது, நடைமுறையிலுள்ள சட்டப்பூர்வ மற்றும் அமைப்பு சார்ந்த விதிகளை ஆய்வு மேற்கொள்ளும். அதன்பின் இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான மற்றும் வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.