டாஸ்மாக் அமைக்க எதிர்ப்பு: வட்டாட்சியரிடம் பரமன்குறிச்சி கிராம மக்கள் மனு
By SAM ASIR
தங்கள் பகுதியில் மதுக்கடை அமைக்கப்படக்கூடாதென பரமன்குறிச்சி கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து திருச்செந்தூர் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்தை சேர்ந்தது பரமன்குறிச்சி கிராமம். பரமன்குறிச்சி கஸ்பா பகுதி வழியாக பிச்சிவிளை செல்லும் சாலை ஓரமாக டாஸ்மாக் மதுக்கடை அமைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக கிராம மக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
பரமன்குறிச்சி கஸ்பா - பிச்சிவிளை சாலையில் வழிபாட்டு ஸ்தலங்கள் உள்ளன. குடியிருப்பு பகுதியை அடுத்து தோட்டங்கள், மேய்ச்சல் பகுதிகள் அமைந்துள்ள இந்தச் சாலையோரமாக மதுக்கடை அமைத்தால் பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமியருக்கு தொல்லைகள் நேரிடுமென அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். பரமன்குறிச்சி கஸ்பா பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்கக்கூடாது என்று திருச்செந்தூர் வட்டாட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க முடிவு செய்தனர். அதன்படி அக்டோபர் 25ம் தேதி, வியாழன் அன்று கஸ்பா பகுதி பெண்கள் 200பேர் உள்பட முந்நூறுக்கும் மேற்பட்டோர் திருச்செந்தூர் வட்டாட்சியர் தில்லை பாண்டியை சந்தித்து மனு அளித்தனர். கிராம மக்களை சந்தித்த கோட்டாட்சியர் கோவிந்தராஜ் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க வேண்டாமென்ற மக்களின் கோரிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் உரிய முறையில் தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளார்.