மாவோயிஸ்ட் தாக்குதலில் தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் பலி!
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற உள்ள தேர்தல் குறித்து செய்தி சேகரிக்க சென்ற தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தாக்குதலில் பலியானார். அவருடன் இரண்டு காவல்துறையினரும் உயிரிழந்துள்ளனர்.
இதுபற்றி கூறப்படுவதாவது:
சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 12 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இருகட்டமாக நடைபெற உள்ள தேர்தல் குறித்து செய்தி நிறுவனங்கள் பரபரப்பாக செய்தி சேகரித்து வருகின்றன.
தூர்தர்ஷன் செய்தி நிறுவனத்தின் சார்பில் செய்தியாளர் தீரஜ் குமார், ஒளிப்பதிவாளர் அச்சுதானந்த சாஹு, ஒளிப்பதிவு உதவியாளர் மோர்முக்த் சர்மா ஆகியோர் சத்தீஸ்கருக்கு பணிக்குச் சென்றுள்ளனர். தாந்திவேடா என்று பகுதியிலுள்ள அரண்பூர் கிராமத்தில் முதற்கட்ட தேர்தலின்போதே வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
அக்டோபர் 30ம் தேதி, அங்கு காவல்துறையினருடன் செய்தியாளர்களும் சென்றபோது, திடீரென மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஆரம்பித்தது. ஏறக்குறைய 100 நக்ஸலைட்டுகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஒளிப்பதிவாளர் அச்சுதானந்த சாஹு, காவல் உதவி ஆய்வாளர் ருத்ர பிரதாப், உதவி காவலர் மாங்கலு ஆகியோர் தாக்குதலுக்கு இலக்காகினர். காவல்துறையினர் நிகழ்விடத்திலேயே பலியாகினர். ஒளிப்பதிவாளர் காயத்தினால் பின்னர் உயிரிழந்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அச்சுதானந்த சாஹு, பணியினிமித்தம் டெல்லியில் வசித்து வந்தார். அவருக்குக் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. மனைவி பெயர் ஹிமாஞ்சலி சாஹு. இந்த தம்பதியருக்கு இன்னும் குழந்தைகள் இல்லை. எதிர்பாராத நிகழ்வில் கணவரை இழந்துள்ள மனைவி செய்வதறியாது திகைத்துப் போயுள்ளார்.
இந்நிலையில் இத்தாக்குதலுக்கும் தேர்தலுக்கும் தொடர்பு இல்லை. அது சாலை பணி ஒன்றினை குறிவைத்து நடந்தது என்று சத்தீஸ்கர் காவல்துறை தெரிவித்துள்ளது.