தென்மாவட்டங்களுக்கு பன்றி காய்ச்சல் தடுப்பூசி கிடைப்பதில் தட்டுப்பாடு
தென் மாவட்டங்களில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் பணியாற்றுவோருக்கான தடுப்பூசி கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
பன்றி காய்ச்சல் பாதிப்புள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்போர் மற்றும் நோய் பாதிப்புக்கான அதிதீவிர இலக்கில் இருப்போருக்கு அதற்கான தடுப்பூசியை போடப்பட வேண்டுமென்று உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டலின்படி, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கடந்த ஆண்டு மே மாதம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள், ஆய்வக பணியாளர்கள், கர்ப்பிணிகள், நீரிழிவு நோயாளிகள், ஆஸ்துமா, இருதயம், சிறுநீரகம் மற்றும் ஈரல் பாதிப்புள்ளோர் அதிதீவிர பாதிப்பு இலக்கினராக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மதுரை மையத்திற்கு 16,000 தடுப்பூசி குப்பிகள் அனுமதிக்கப்பட்ட நிலையில் இதுவரை 8,000 குப்பிகளே கிடைத்துள்ளதாகவும் அவை ஒன்பது மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவை துணை இயக்குநர் கே.வி.அர்ஜூன் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். கிடைத்த குப்பிகள் மதுரை மாவட்டத்திற்கு 2,000, திண்டுக்கல், கரூர் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் 1,000, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு 750, நாகப்பட்டினம், தஞ்சாவூர் மற்றும் சிவகங்கை ஆகிய ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 500 வீதம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் நோய் பாதிப்புள்ளோருக்கு சிகிச்சை அளிப்போருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும். மதுரை மையத்திற்கு வழங்கப்பட வேண்டிய பன்றி காய்ச்சல் தடுப்பூசிகள் இன்னும் ஒரு சில நாள்களுக்குள் கிடைத்து விடும் என்று கூறப்படும் நிலையில், தேவைப்படும் எண்ணிக்கை உண்மையில் இன்னும் அதிகமாகும். ஆகவே, மருத்துவ பணியாளர்கள் தங்கள் சொந்த செலவில் தடுப்பூசிகளை தனியாரிடமிருந்து வாங்கி பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவ பணியாளர்கள் மத்தியில் பேச்சு நிலவுகிறது.