ஹார்வர்டு தமிழ் இருக்கை- அந்த ரூ 3 கோடிக்கு கணக்கு சொல்வாரா?அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் மீது அதிர்ச்சி புகார்
ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைவதற்கான முயற்சிகளில் முன்னின்றவர் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன். அவர் மீதே அதிர்ச்சிப் புகார்களை அள்ளித் தெளிக்கின்றனர் உலகத் தமிழ் ஆர்வலர்கள்.
உலகப்புகழ்பெற்றதும் 380 ஆண்டுகள் பழமையானதுமான ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில், 2700 ஆண்டுகள் இலக்கிய, இலக்கண வரலாறு கொண்ட தமிழ்மொழிக்கு இருக்கை அமைய இருக்கின்றது. இதற்கான முன்முயற்சியை எடுத்தது, அமெரிக்காவில் பிரபல சிறப்பு மருத்துவர்களாகத் தொழில் செய்துவருபவர்களுமான மருத்துவர்கள் ஜானகிராமன் மற்றும் சம்பந்தம் ஆகியோர். இவர்கள் இருவரும் தலா அரை மில்லியன் டாலர்களை நன்கொடை அளித்து பல்கலைக்கழகத்திடம் முறையாக அனுமதி பெற்றனர்.
ஹார்வர்டு பல்கலைக் கழகம் தேர்வு செய்யும் தமிழ்ப் பேராசிரியர் ஒருவரின் தலைமையின் கீழ், செயல்படத் தொடங்கும் தமிழ் இருக்கைக்கு இந்தியப் பணத்தின் மதிப்பில் 40 கோடி ரூபாயை ஆதார நிதியாகச் செலுத்தவேண்டும். இதையடுத்து மீதமுள்ள நிதியைத் திரட்டும் முயற்சியை உலகத் தமிழர்கள் முன்னெடுத்தனர். இந்தத் தமிழ் இருக்கையானது, தனிப்பட்ட மனிதர்களால் உருவாக்கப்பட்டதாக இல்லாமல் உலகம் முழுவதும் வாழும் தமிழ் உணர்வாளர்களின் நன்கொடையாலும் தமிழக அரசின் உதவியாலும் தொடங்கப்பட இருக்கின்றது. இதற்காக ‘ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைப்பு (Harvard Tamil Chair Inc) என்ற அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் இயக்குநர் குழுவில் டாக்டர்கள் ஜானகிராமன், சுந்தரேசன் சம்பந்தம் ஆகியோருடன் பேராசிரியர் வைதேகி ஹெர்பர்ட், பால் பாண்டியன், எழுத்தாளர் அப்பாத்துரை முத்துலிங்கம், குமார் குமரப்பன், முனைவர் ஆறுமுகம் முருகைய்யா, முனைவர் வ.இரகுராமன், சிவன் இளங்கோ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் தவிர உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைய நன்கொடை அளிக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கு வழிகாட்ட அதிகாரபூர்வ ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தநிலையில், தமிழக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சரை தொடர்புபடுத்தி சர்ச்சை எழுந்துள்ளது.
' இருக்கை அமைய தேவைப்படும் ரூ.40 கோடியில் 35.5 கோடி ரூபாய் திரட்டப்பட்ட சமயத்தில் இமெயில் தமிழரான சிவா அய்யாத்துரை, ‘ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கான முயற்சிகள் தேவையற்றவை’ எனத் தெரிவித்த கருத்து சர்ச்சையானது.
இந்த சர்ச்சைகள் எல்லாம் முடிவுக்கு வந்து,போதுமான நிதியும் திரட்டப்பட்டுவிட்டது. ஆனால், இருக்கைக்காக வசூலிக்கப்பட்ட தொகைகளில் பல கோடிகள் முடங்கிக் கிடக்கின்றன. அவை எதுவும் ஹார்வர்டு கணக்கில் வரவு வைக்கப்படவில்லை' என அதிர்ச்சியோடு கூறுகின்றனர் தமிழ் ஆர்வலர்கள். இதைப் பற்றிப் பேசும் அவர்கள், ' ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக தமிழக அரசு 10 கோடி ரூபாய் நிதி உதவி அளித்தது. இதற்கு முக்கியக் காரணம், அமைச்சர் பாண்டியராஜன்தான். இந்தப் பணத்தைத் தவிர்த்து மேலும் அதிக தொகைகளை வசூலிக்க வேண்டிய நிலை வந்தது.
அப்போது, தமிழ் இருக்கைக்கு நன்கொடை அளிக்க விரும்புகிறவர்கள், தமிழ் வளர்ச்சித்துறையின்கீழ் செயல்படும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்துக்குப் பணம் அனுப்பலாம் என அறிவித்திருந்தார் அமைச்சர் பாண்டியராஜன். அவரது வேண்டுகோளை ஏற்று ஏராளமானோர் பணம் கொடுத்தனர். அந்த வகையில் தோராயமாக 3 கோடி ரூபாய்க்கும் மேல் சேர்ந்துவிட்டது. இந்தப் பணம் என்னவானது என இப்போது வரையில் தெரியவில்லை. ஹார்வர்டு கணக்கில் இது செலுத்தப்படவில்லை. நன்கொடையாளர்களுக்கும் திருப்பி அனுப்பப்படவில்லை. இதைப்பற்றி அமைச்சர்தான் தெளிவுபடுத்த வேண்டும்' என்கின்றனர்.
-அருள் திலீபன்