அதிமுக செய்தி தொடர்பாளர், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் அப்சரா ரெட்டி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போதுஅவர் கூறியதாவது,
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் என்னை கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நியமித்து கழகப் பணியாற்றிட வாய்ப்பினை வழங்கியமைக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுக ஆட்சியில் சொன்னதை எல்லாம் செய்தோம்.
இன்றைக்கு தமிழக வெற்றிக்கழக ஆட்சி ரீல்ஸ் ஆட்சியாக இருக்கிறது. மக்களுடைய தேவைகளை நிறைவேற்றிய அரசாக அதிமுக அரசு திகழ்ந்தது. உதாரணத்திற்கு கொரோனா காலகட்டம், மழை வெள்ளம் என இக்கட்டான சூழ்நிலைகளில் மக்களுக்காக ஓடோடிச் சென்று செயல்பட்டோம். மக்களோடு மக்களாக இருந்து செயல்பட்ட இயக்கம் அதிமுக.
இந்த இயக்கத்திலிருந்து ஒரு சிலர் வேறு கட்சிக்கு சென்றுள்ளார்கள். அவர்கள் தங்களுக்கு முகவரி கொடுத்த இயக்கத்தை நினைத்துப் பார்க்க வேண்டும். கூடிய விரைவில் நமது இயக்கத்தின் பெருமையே உணர்வார்கள். தமிழக வெற்றிக்கழகம் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அதை விட்டுவிட்டு தேவையில்லாமல் பஞ்ச் டயலாக் பேசிக் கொண்டிருப்பதால் எந்தப் பிரயோஜனமும் கிடையாது. இந்த பஞ்ச் டயலாக் எல்லாம் மக்கள் விரும்ப மாட்டார்கள். இன்றைக்கு சிங்கப்பெண் என்று சொல்கிறார்கள். ஆனால் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அன்றைக்கு பெண் கமாண்டர் படையை கொண்டு வந்து விட்டார்கள்.
தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் வார்த்தைகளை பார்த்து பேச வேண்டும். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டும். ஒரு அரசு பள்ளியில் அமைச்சர் ஒருவர் மாணவிக்கு ஆங்கிலம் தெரியுமா என கைகட்டி நிற்க வைத்து சோதிப்பது வருத்தம் அளிக்கிறது. மேலும் இவற்றையெல்லாம் ரிலீஸ் ஆக எடுத்து வெளியிடுவது மேலும் வருத்தம் அளிக்கிறது.
ஒருவருடைய வீட்டு அருகே ஏதாவது துயர சம்பவம் நிகழ்ந்தால், அந்த சம்பவம் குறித்து விசாரித்து அந்த துக்கத்தில் அருகில் வசிப்பவர்கள் பங்கு கொள்வார்கள். ஆனால். கரூர் சம்பவத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 41 நாட்கள் வீட்டிலேயே அமைதியாக இருந்தவர் விஜய். மக்களுக்கான ஆக்கபூர்வமான பணிகளில் இந்த அரசு ஈடுபட வேண்டும். அதை விட்டுவிட்டு ரீல்ஸ் மோகத்துடன் இருப்பதை தவிர்க்க வேண்டும். கூடிய விரைவில் அதிமுக அரசு செய்த நல்ல திட்டங்களையும், தற்போது உள்ள ஆட்சியின் குளறுபடிகளையும் மக்கள் உணர்வார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.








