விஜய் படங்களின் கலவையைதான் தேர்வு செய்தாரா மகேஷ்பாபு! - மகரிஷி விமர்சனம்

Maharshi movie review

by Sakthi, May 9, 2019, 14:33 PM IST

‘வெற்றிக்கு எப்போதுமே ஃபுல்ஸ்டாப் கிடையாது. கமா மட்டுமே வெற்றிக்கு நிரந்தரம்’ என்று சொல்லும் மகேஷ்பாபுவின் மகரிஷி ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றிருக்கிறதா?

மகரிஷி

அமெரிக்காவில் உள்ள பெரிய கம்பெனியில் சி.இ.ஓவாக இருக்கிறார் மகேஷ்பாபு. சர்க்காரில் விஜய் போல... உலகமெங்கும் இவரைத் தெரியாமல் யாரும் இருக்கமுடியாது. எதைத் தொட்டாலும் வெற்றி மயமாக இருக்கும் மகேஷ்பாபுவுக்கு சர்ப்பரைஸ் கிஃப்டாக அவரின் கல்லூரி நண்பர்கள் அமெரிக்கா வருகிறார்கள். சுருள் நீள்கிறது. மகேஷ்பாபு கல்லூரி படிக்கும் உயிர் நண்பனாக இருக்கும் நரேஷ், ஒரு சம்பவத்தால் படிப்பை இழக்கிறார். அதனால் வாழ்க்கையே தடம் மாறிவிடுகிறது. இதை தெரிந்து கொள்ளும் மகேஷ்பாபு அவனைத் தேடி இந்தியா வருகிறார். கார்ப்பரேட் கைகளில் சிக்கி விவசாயிகள் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு எதிராக போர்கொடி தூக்கும் நரேஷுக்கு உதவியாக களத்தில் இறங்குகிறார் சி.இ.ஓ மகேஷ்பாபு. விவசாயிகளுக்காக கத்தியில் விஜய் வருவது போல... நண்பனுக்காகவும், விவசாயிகளுக்காகவும் களமிறங்கும் மகேஷ்பாபு வென்றாரா என்பதே மீதிக் கதை.

மகரிஷி

திரைப்படம் முழுக்க மகேஷ்பாபுவே நிறைந்திருக்கிறார். கல்லூரி மாணவனாகவும், ஆர்ஜின் கம்பெனியின் சி.இ.ஓ. என இரண்டு இடத்திலும் நச்சென பதிகிறார். ரசிகர்களை ஈர்க்கிறார். அவரின் ஒவ்வொரு வசனத்துக்கும் கைத்தட்டலும் விசிலும் பறக்கிறது. வருடத்திற்கு ஒரு படமென்பதே மகேஷ்பாபு ஸ்டைல். ஒரு படமென்றாலும் தரமாக கொடுத்து விடவேண்டும் என்று நினைப்பவர். 2015ல் ஸ்ரீமந்துடு, 2016ல் பிரம்மோத்சம், 2017ல் ஸ்பைடர், 2018ல் பாரத் ஆனே நானு வரிசையில் இப்பொழுது மகரிஷி. வழக்கம் போல அதே மாஸ், அதே செண்டிமெண்ட் ஸ்டோரி என மகேஷ்பாபுவின் அதே ஸ்டைல் சினிமா.

தமிழ் ரசிகர்கள் கத்தி, தலைவா, சர்க்கார் பார்த்து ரசித்துவிட்டபடியால், மகேஷ்பாபுவின் இந்தப் படம் தமிழ் ரசிகர்களை பெரிதாக கவராது. ஆனால் மகேஷ்பாபு ரசிகர்கள் என்றால் ஈர்க்கலாம். கதையில் பெரிதாக எந்த மெனக்கெடலும் இல்லை. வழக்கான தெலுங்கு சினிமா கதைதான். மகேஷ்பாபு எனும் உச்ச நட்சத்திரத்துக்கு சிறந்த கதை வழங்க தவறிவிட்டார் இயக்குநர் வம்சி.

மகரிஷி

தேவி ஸ்ரீபிரசாத் இசையில் படத்தில் ஏழு பாடல்கள் இருக்கிறது. ஆனாலும் எந்த இடத்திலும் பாடல்கள் தொந்தரவு தரவில்லை. தேவி ஸ்ரீபிரசாத்தின் வழக்கமான இசை என்பது கூட காரணமாக இருக்கலாம்.

இந்தியில் வெளியான அந்தாதூன், லஸ்ட் ஸ்டோரீஸ் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த மோகனன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு மேற்கொண்டிருக்கிறார். மகேஷ்பாபுவை கெத்தாக காட்டிய இடமாகட்டும், சண்டைக் காட்சியாகட்டும், கிராமத்தை பசுமையாக தந்த இடமாகட்டும் ஒளிப்பதிவு நச். படத்துக்கான நீளம் அதிகம். சில இடங்களில் பிரவீன் கேஎல் கத்திரி இட்டிருக்கலாம்.



மகரிஷி

நாயகி பூஜா ஹெக்டேவுக்கு பெரியதாக எந்த ரோலும் இல்லை. வழக்கமான நாயகி கேரக்டர் தான். அழகாக வருகிறார், அழகாக நடனமாடுகிறார். அவ்வளவே. அல்லரி நரேஷூக்கு மகேஷ்பாபுவுடன் போட்டிப் போட்டுநடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை சிறப்பாகவே மேற்கொண்டிருக்கிறார். பிரகாஷ்ராஜ், நாசர், ஜெயசுதா, ஜெகபதிபாபு, மீனாட்சி தீக்‌ஷித் என அனைவருமே தனக்கான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

“விவசாயிகள் நம்மிடம் இறக்கத்தை எதிர்பார்க்கவில்லை. மரியாதையை தான் எதிர்பார்க்கிறார்கள்.” , “எல்லோரும் விவசாயியாகனும்னு அவசியம் இல்லை. விவசாயிகளை விவசாயம் செய்யவிட்டாலே போதும்”, “விவசாயங்கிறது மனுஷனுக்கும் பூமிக்குமான உறவு” என விவசாயத்தை கொண்டாடியிருக்கிறார்கள். விவசாயத்தை பேசும் எந்த சினிமா என்றாலும் வரவேற்க வேண்டியதே. விவசாயம் சார்ந்த ஒரு கதையை மகேஷ்பாபு தேர்ந்தெடுத்ததற்காகவே ராயல் சல்யூட்.
மகரிஷி

நெருங்கிய நண்பனான நரேஷை கல்லூரியில் இருந்து நீக்கிவிட்டதை ஐந்து வருடம் கழித்து தான் மகேஷ்பாபு தெரிந்துகொண்டார் என்பதை ஏற்க முடியவில்லை. ஒரு பெரிய கம்பெனியின் சி.இ.ஓ. லீவ் போட்டு விட்டு கிராமத்துக்கு வர நிர்வாகம் எப்படி ஒத்துக் கொள்கிறது? வில்லன் ஜெகபதி பாபுவின் வில்லத்தனம் இவ்வளவு தானா என பல கேள்விகள் எழாமலும் இல்லை.

மொத்தத்தில் வழக்கமான தெலுங்கு சினிமா கதை. மகேஷ்பாபுவின் ரசிகர்கள் நிச்சயம் படத்தை ரசிக்கலாம். புதிதாக திரைக்கதையிலோ, ஆக்‌ஷனிலோ எந்த வித்தியாசமும் இல்லாத வழக்கமான அதே தெலுங்கு சினிமா தான் மகரிஷி. இருந்தாலும் ரசிக்கலாம்.. விசிலடிக்கலாம்...

மு.க. ஸ்டாலினின் முதல்வர் கனவு என்றுமே பலிக்காது – ஓபிஎஸ் ஆருடம்!

You'r reading விஜய் படங்களின் கலவையைதான் தேர்வு செய்தாரா மகேஷ்பாபு! - மகரிஷி விமர்சனம் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை