அம்மாவின் கடைசி ஆசை நிறைவேற்ற இயக்குனர் வேண்டுகோள் டாஸ்மாக் திறப்பதைப் பரிசீலனை செய்யுங்கள்

TM CM Pazanichami have to Fulfill AMMAs Ambition

by Chandru, May 6, 2020, 13:50 PM IST

படத் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் கலப்பை மக்கள் இயக்க தலைவருமான பிடி,செல்வகுமார் தமிழக முதல்வருக்கு வைத்திருக்கும் கோரிக்கை வருமாறு:
மே 1-ம் தேதி அன்று மதுவால் பாதிக்கப்பட்ட 150 பெண்களுக்கு அரிசி முட்டைகள் கலப்பை மக்கள் இயக்கம் வழங்கியது. அன்று 150 பெண்களும் கண்ணீரோடு டாஸ்மாக் கடை களை இனி திறக்க வேண்டாம் என்று கோரிக்கை வைத்தோம்.மீண்டும் லட்சக் கணக்கான பெண்கள் சார்பாகப் பணிவான வேண்டுகோள்.


45 நாட்களுக்குப் பிறகு மதுக் கடைகள் திறப்பதால் பெரும் கும்பலாகக் குடிக்க வருவார்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியாது.இதனால் நோய்த் தொற்று ஏற்படும். டாஸ்மாக்கில் குடிப்பவர்கள் பெரும்பாலும் ஏழை எளிய மக்கள். வேலை இல்லாமல் பணக் கஷ்டத்தில் இருக்கும் இப்போது கடன் வாங்கி குடித்து கடனாளி ஆகி விடுவார்கள்.குடும்பத்திற்குள் சண்டை சச்சரவு வந்து தற்கொலைகள் நிகழ வாய்ப்புள்ளது. விபத்து, திருட்டு,வழிப்பறி, கற்பழிப்பு,கொலை போன்றவற்றிற்கும் வழிவகுக்கும்.
குடிப்பவர்கள் போதையுடன் இருக்கும் போது கண்ட இடத்தில் எச்சில் துப்புவார்கள், மற்றும் சிகரெட்,பீடி புகைத்து புகையை வெளியிடுவார்கள்.இதனால் கிருமித் தொற்று ஏற்படும். கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டு பிடிக்க முடியாத சூழலில் உடலில் எதிர்ப்புச் சக்தி இருந்தால் கொரோனா தாக்காது. ஆனால் குடிப்பதால் உடலில் எதிர்ப்புச் சக்தி குறைந்து கொரோனோவால் உயிருக்கு ஆபத்து ஏற்படும். ஊரடங்கால் 45 நாட்கள் குடிக்காமலும் வாழ முடியும் என நிரூபித்துள்ளார்கள்.

உடல் ஆரோக்கியத்துடனும் , புத்துணர்ச்சியுடனும் இருக்கும் அவர்களை மீண்டும் குடிப்பதற்கு அரசே வழி வகை செய்யலாமா. குடி குடியைக் கெடுக்கும் என்ற வாசகம் ஒவ்வொரு பாட்டில்களிலும் அரசே எழுதி வைத்துள்ளது. அரசே குடியைக் கெடுக்கத் துணை போகலாமா?டாஸ்மாக் அரசுப் பணியாளர்களும் பூரண மதுவிலக்கே மக்களுக்கும் ,அரசுக்கும் நல்ல தீர்வு என்று தங்களுக்குக் கடிதம் தந்துள்ளார்கள். மறைந்த முதல்வர் அம்மா படிப்படியாகக் குறைத்து முழு மதுவிலக்கைக் கொண்டு வருவேன் என்று பதவி ஏற்றதும் சொன்னார்கள். அவர்கள் சொன்ன வாக்கைக் காப்பாற்ற, அவர்களின் கனவை நனவாக்க தங்களுக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.கோடானகோடி தமிழக மக்களின் வேண்டுதலும் வேண்டுகோளும் டாஸ்மாக் வேண்டாம் என்பதே. அம்மாவின் ஆத்மா சாந்தியடைய மூடிய டாஸ்மாக்கை மீண்டும் திறக்காமல் இருக்க நடவடிக்கை எடுங்கள். அம்மாவின் அரசு பெண்களின் அரசு. கோடானகோடி பெண்களின் வாழ்க்கையில் விளக்கேற்றுங்கள்.

இவ்வாறு பிடி செல்வகுமார் வேண்டுகோள் வைத்துள்ளார்.

You'r reading அம்மாவின் கடைசி ஆசை நிறைவேற்ற இயக்குனர் வேண்டுகோள் டாஸ்மாக் திறப்பதைப் பரிசீலனை செய்யுங்கள் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை