ஆன்லைனில் சூதாட்டம் கொடிகட்டிப் பறக்கிறது. டிவி, செல்போன் ,லேப்டாப், கம்ப்யூட்டர் என எதைத் திறந்தாலும் ஆன்லைன் சூதாட்டத்துக்கு விளம்பரம் முந்திக் கொண்டு வந்து நிற்கிறது. அதற்குப் பிரபலங்கள் விளம்பரத்தில் நடித்து பப்ளிசிட்டி செய்கிறார்கள்.
கிரிக்கெட் கேப்டன் விராத் கோலி மற்றும் நடிகை தமன்னா ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடித்து பிரபலப்படுத்துகிறார்கள். தற்போது இது சர்ச்சையாகி உள்ளது. அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி சார்பில் போலீஸ் டிஐஜியிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக போலீசார் நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நடிகர் ஷாம் வீட்டைச் சோதனையிட்டு அங்குச் சூதாடியதாக ஷாம் உள்ளிட்ட 13 பேர்களைக் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கொரோனா ஊரடங்கின் போது போலீஸார் பல இடங்களில் ரோந்து சுற்றிவந்தனர். சில இடங்களில் டிரோன்கள் மூலம் கேமிராவை வைத்து உயரப் பறக்க விட்டபோது மொட்டை மாடிகளிலும் தோப்புக்குள்ளும் பலர் கூட்டமாக அமர்ந்து சீட்டாடியது தெரிய வந்தது. அவர்கள் டிரோன் கேமராக்களை பார்த்தவுடன் முகம் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக முகத்தை மூடிக்கொண்டு ஓட்டம் பிடித்த ருசிகரங்கள் நடந்தன.