Sunday, Dec 5, 2021

எனிமி நடிகர்கள் மலேசியா போகிறார்கள்?

by Chandru Dec 9, 2020, 15:18 PM IST

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களாக வலம் வருபவர்கள் விஷால் மற்றும் ஆர்யா. நடிகர்கள் என்பதைத் தாண்டி இருவரும் நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. விஷால் வித்தியாசமான வாய்ப்புக்காக எதிர்பாத்துக் கொண்டிருந்த நேரத்தில் அவரை இயக்குனர் பாலாவிடம் அழைத்து சென்று ஆர்யா அறிமுகம் செய்து வைத்து அவன் இவன் படத்தில் திருநங்கை சாயல் கொண்ட மாறுபட்ட கதாபாத்திரத்தை பெற்றுத் தந்தார். இந்த கதாபாத்திரத்தில் ஒரு கண் பார்வை ஒன்றரைக் கண்போன்று இருக்க வேண்டும் என்று பாலா கூறியதால் அதற்காகத் தனது கண்ணை ஒன்றரை கண்போல் வைத்து பயிற்சி செய்தார்.

படம் முழுவதும் அதேபோல் நடித்ததால் அதில் விஷாலுக்கு கண் பாதிப்பு ஏற்பட்டது. அதற்காக அவர் சிகிச்சை பெற்றார்.அவன் இவன் படத்துக்குப் பிறகு இருவரும் முழு படத்தில் ஒன்றாக இணைந்து நடிக்கவில்லை ஆனால் அவர் படத்தில் இவரும் இவர் படத்தில் அவரும் கெஸ்ட் ரோலில் நடித்தனர்.பாலா இயக்கத்தில் அவன் இவன் என்ற படத்தில் இணைந்து நடித்ததற்குப் பிறகு பல வருடங்கள் கழித்து தற்போது எனிமி என்ற படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தை ஆனந்த் சங்கர் இயக்க வினோத் குமாரின் மினி ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியது விஷால் ஆர்யா இருவரும் இணைந்து நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இதன் ஷூட்டிங் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து சென்னையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் சில சண்டைக் காட்சியில் மட்டும் 4 நாட்களில் 4 கேமராக்களை கொண்டு முற்றிலும் மாறுபட்ட வகையில் மிகப் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது.தற்போது இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் நடிகர் பிரகாஷ்ராஜ் உட்படப் பல நடிகர், நடிகைகள் பங்கேற்றுள்ளனர். இதனையடுத்து படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் நடைபெற உள்ளது. மூன்றாம் கட்ட படப்பிடிப்பை முடித்த பிறகு நான்காம் கட்டமாகப் படக்குழு முழுவதும் மலேசியா செல்ல இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வித்தியாசமான கதைக் களத்தோடு உருவாகி வரும் இந்த படத்திற்காக விஷால் மற்றும் ஆர்யா ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அவன் இவன் திரைப்படத்தைப் போல எனிமி திரைப் படமும் மிகப் பெரிய அளவில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்க ஆர் டி ராஜ சேகர் ஒளிப்பதிவு பணிகளைக் கவனித்து வருகிறார். கலை இயக்குனராக ராமலிங்கம் ஒப்பந்தமாகி உள்ளார். ரவி வர்மா நடன அமைக்க உள்ளார்.

You'r reading எனிமி நடிகர்கள் மலேசியா போகிறார்கள்? Originally posted on The Subeditor Tamil

READ MORE ABOUT :

More Cinema News