அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐஏஎஸ் அவர்களுக்கு கோவை பொதுமக்களின் நலன் கருதி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். கடிதத்தில் கூறியிருப்பதாவது,
''தமிழ்நாடு பதிவுத்துறை கோவை மண்டலம், கோவை வடக்கு பதிவு மாவட்ட எல்லைக்குட்பட்ட வடவள்ளி சார் - பதிவாளர் அலுவலகம் கோவை மண்டலத்தின் முக்கிய சார் - பதிவாளர் அலுவலகங்களில் ஒன்றாக செயல்பட்டு வருகின்றது. நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் சொத்து சம்பந்தமான ஆவணங்கள் (கிரையம், ஒப்பந்தம், தானம், விடுதலை, பொது அதிகாரம், அடமானம், உயில், பாகபிரிவினை) மற்றும் திருமண பதிவு போன்ற பணிகளைக் மேற்கொள்வதற்கு வடவள்ளி சார் - பதிவாளர் அலுவலகத்தை நாடிச் செல்கின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வடவள்ளி சார் - பதிவாளர் அலுவலகம் மருதமலை கோவில் அடிவாரத்தில் அமைந்துள்ளதால் பதிவு செய்ய வரும் பொதுமக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினர் பல்வேறு நடைமுறை சிக்கல்களையும், பிரச்சனைகளையும் நாள்தோறும் எதிர்கொள்கின்றனர்.

உலக பிரசித்தி பெற்ற மருதமலை கோவில் முருக பெருமானின் ஏழாம் படை வீடாகப் போற்றப்படும் மலைக்கோயிலாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த மருதமலை கோவிலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து முருகப்பெருமானை தரிசிப்பதற்காகவும் மற்றும் இக்கோவிலில் நடைபெறும் திருமணம் மற்றும் பல்வேறு சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் எந்நாளும் வருகை புரிகின்றனர். மேலும் தைப்பூசம், விசேஷ நாட்களான செவ்வாய் கிழமை, கிருத்திகை, சஷ்டி விரதம் ஆகிய விழாக்காலங்களில் முருகப்பெருமானை தரிசிப்பதற்கு லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருகின்றனர்.
இதன் காரணமாக இப்பகுதியில் எப்பொழுதும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் வாகனங்களினால் சாலைகள் முழுவதும் நிரம்பி இருப்பதோடு, பெருமளவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுவதினாலும், சார் பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ள மருதமலையின் அடிவாரத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்பாகவே வாகனங்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்படுகின்றன.
எனவே வடவள்ளி சார் - பதிவாளர் அலுவலகத்தில் ஆவணங்களை பதிவு செய்ய வரும் பொதுமக்கள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் தங்களது உடல்நிலை காரணமாக காவல் துறையினர் தடுத்து நிறுத்தும் இடத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நடந்து செல்ல இயலாது என்பதனை காவல்துறையினரிடம் எடுத்து கூறி வாகனத்தில் செல்வதற்கான அனுமதியை வேண்டி மன்றாடினாலும், காவல்துறையினர் பல காரணங்களை கூறி அனுமதி தர மறுக்கின்றனர். இதனால், வடவள்ளி சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு நடந்து செல்ல வேண்டிய கடினமான சூழலை எதிர்கொள்வதுடன், உரிய நேரத்தில் தங்களது ஆவணங்களை பதிவு செய்ய இயலாமல் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய பெரும் அல்லலுக்கு ஆளாகின்றனர்.

மேலும் தமிழ்நாடு அரசு மோசடி ஆவண பதிவுகளை தடுக்கும் நோக்கில், பத்திரப்பதிவுக்கு அசல் ஆவணத்தை கட்டாயமாக்கும் வகையில் புதிய பதிவுச் சட்ட மசோதாவை (Registration (Tamil Nadu Amendment) Act, 2025 - 34C) தமிழக சட்டப்பேரவையில் 2025 ஏப்ரல் மாதம் தாக்கல் செய்தது. இச்சட்ட மசோதாவிற்கு இந்தியக் குடியரசுத் தலைவர் 23.01.2026 அன்று ஒப்புதல் வழங்கி உள்ளதை மேற்கோள் காட்டி வடவள்ளி சார் பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்திட கடமைப்பட்டுள்ளோம். வடவள்ளி சார் - பதிவாளர் அலுவலகத்தில் ஆவண பதிவுகளை மேற்கொள்ள வரும் பொதுமக்கள் சார் - பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் எந்நாளும் கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்களை கடந்து நடந்து செல்ல வேண்டியுள்ளதால், தங்களது அசல் ஆவணம் மற்றும் பணம் ஆகியவைகளை கொண்டு செல்வதில் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. காரணமாக மிகுந்த மகிழ்ச்சியுடன் மேற்கொள்ள வேண்டிய ஆவண பதிவுகளை அச்சத்துடனும், பெரும் பதற்றத்துடனும் மேற்கொள்ள வேண்டிய மனநிலைக்கும், சூழ்நிலைக்கும் தள்ளப்படுகிறார்கள்.
எனவே, வடவள்ளி பேருந்து நிலையம் அருகில் மருதமலை கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், வடவள்ளி சார் - பதிவாளர் அலுவலகத்தை அமைத்திட உரிய நடவடிக்கையை விரைந்து செய்ய வேண்டுமென பொதுமக்கள் மற்றும் பெயிரா கூட்டமைப்பின் சார்பாக வேண்டுகோள் வைக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.







