கோவை மாநகராட்சி வடவள்ளி 36 வது வார்டில் ஏழை - எளியோருக்கான சிகிச்சையளிக்க அரசு நகர்புற ஆரம்ப சுகாதார மையம் கட்டப்பட்டது. இந்த ஆரம்ப சுகதார நிலையம் செயல்படவில்லை.இதையடுத்து, இந்த கட்டடத்தை திமுகவை சேர்ந்த பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஷியாம் சுந்தர் வீடாக மாற்றி குடியேறியுள்ளார். இங்கு, தனது மனைவி கனிகா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசிக்க தொடங்கியுள்ளார்.
இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத் தளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து, நேரடியாக களத்திற்கு சென்று பார்த்ததில் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் குழந்தைகளின் துணிகள், மற்றும் அவரது மனைவியின் துணிகள் கயறுகட்டி காயவைக்கப்பட்டு இருந்தது. கட்டடத்தினுள் வீட்டுக்கு தேவையான பல பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. கிச்சன் அறையில் சமையலுக்கு தேவையான பொருட்கள் இருந்தன.

ஷியாம் சுந்தரின் மனைவி கனிகா '' இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் எனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறோம். இங்கு வாரம் ஒருமுறை மட்டும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதனால், நாங்கள்தான் குடும்பத்துடன் வசித்துவருகிறோம்'' என்கிறார்.







