
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் சர்மா வீட்டில் கடந்த 14 ஆம் தேதி அவர் இல்லாத போது தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க சென்றனர்.
அப்போது. பல அறைகளில் இருந்து ஏராளமான பணம் கண்டெடுக்கப்படுகிறது. விஷயம் வெளிய வந்தபின், உச்சநீதிமன்ற கொலீஜியம் அவசரமாக கூடி நீதிபதி யஷ்வந்த் சர்மாவை ஏற்கனவே பணிபுரிந்த அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றல் செய்தது.
இனி என்ன நடக்கும்? ஏராளமான பணம் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக சம்பந்தப்பட்ட நீதிபதியிடம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விளக்கம் கேட்பார்.
விளக்கம் திருப்தி அளிக்கா விட்டால் , உடனே இரண்டு உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் மற்றும் ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி ஆகியோரைக் கொண்டு விசாரணை குழு அமைப்பார். அந்தக் குழு, குற்றச்சாட்டுக்குள்ளளான நீதிபதியை அழைத்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்.
அறிக்கையிலும் குற்றம் உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட நீதிபதியை ராஜினாமா செய்ய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வற்புறுத்துவார். அதெல்லாம் முடியாது என்று நீதிபதி மறுத்தால், அவர் பணியாற்றும் உயர் நீதிமன்றத்தில் அவருக்கான பணிகளை வழங்காமல் நிறுத்தி வைக்கும்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிடுவார்.
பின்னர் , குற்றமிழைத்த நீதிபதியை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கைகளை தொடங்கும்படி, பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முறைப்படி தகவல் அளிப்பார். தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் நீதிபதிக்கு எதிராக கண்டன தீர்மானம் வரப்படவேண்டும்.
மூன்றில் இரு பங்கு உறுப்பினர்கள் ஆதரவோடுதான் நீதிபதியை பதவி நீக்கம் செய்ய முடியும். நமது அரசியல் சாசன சட்டம் உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு இவ்வளவு பாதுகாப்பை வழங்கியுள்ளது.