நேஷன்ஸ் லீக் கோப்பையை வென்றது போர்ச்சுகல் அணி பெனால்டி ஷூட் முறையில் ஸ்பெயினை வீழ்த்தி பட்டம்

Portugal-wins-Nations-League-trophy-beats-Spain-on-penalty-shootout

ஜெர்மனியில் நடைபெற்ற நேஷன்ஸ் லீக் கால்பந்து இறுதிப்போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி போர்ச்சுகல் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

ஜெர்மனியில், மியூனிச் நகரில் இன்று அதிகாலை (ஜூன்.09) நடைபெற்ற இறுதிப் போட்டியில், இவ்விரு அணிகளும் களம் கண்டன.
இரு அணிகளும் பலம் வாய்ந்தவை என்பதால், தொடக்கம் முதலே ஆட்டத்தில் விறுவிறுப்பு நிறைந்து காணப்பட்டது. ஆட்டத்தின் 21ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மார்ட்டின் ஜூபிமெண்டி (Martin Zubimendi, 21') ஒரு கோலடித்து தனது அணிக்கு முன்னிலை ஏற்படுத்திக் கொடுத்தார். ஆனால், ஸ்பெயின் அணியின் மகிழ்ச்சி நீண்டநேரம் நீடிக்கவில்லை. 26ஆவது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் நுனோ மெண்டிஸ் (Nuno Mendes, 26') பதில் கோல் திருப்பி அணிக்கு நம்பிக்கை ஏற்படுத்தினார்.

ஆட்டம் சமநிலையில் இருந்தபோது, 45ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மைக்கேல் ஓயர்சபால் (Mikel Oyarzabal, 45'), தனது அணிக்கான இரண்டாவது கோலை அடித்தார். ஸ்பெயின் அணியை கை ஓங்கிய நேரத்தில், 61ஆவது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அபாரமான முறையில் கோலடித்து ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழத்தினார்.

சர்வதேச போட்டிகளில் போர்ச்சுகல் அணிக்காக ரொனால்டோ அடித்த 138ஆவது கோல் இதுவாகும். எஞ்சிய நிமிடங்களில் கோல் எதுவும் விழாததாலும், இரண்டு முறை வழங்கப்பட்ட கூடுதல் நேரங்களிலும் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததாலும், ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனானது. இதனால் போட்டியின் முடிவை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கொண்டுவரப்பட்டது. இதில் போர்ச்சுகல் அணி 5-க்கு 3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, நேஷன்ஸ் லீக் கோப்பையை வசப்படுத்தியது. ஸ்பெயின் வீரர் அல்வாரோ மொராட்டா (Alvaro Morata)பெனால்டி ஷூட் வாய்ப்பை கோட்டைவிட்ட ஏமாற்றத்தை அளித்தார்.

ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியமான UEFA-வின் நேஷன்ஸ் லீக் கோப்பையை போர்ச்சுகல் அணி வென்றிருப்பது இது இரண்டாவது முறையாகும்.