
UEFA நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் போர்ச்சுகல் அணி கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கண்ணீர் விட்டு அழுத காட்சி வைரலாகி வருகிறது.
ஜெர்மனியின் மியூனிச் நகரில் இன்று அதிகாலை நடைபெற்ற இறுதிப்போட்டியில் போர்ச்சுகல் அணி ஸ்பெயினை பெனால்டி ஷூட் அவுட் முறையில் 5-க்கு 3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
61ஆவது நிமிடத்தில் ஒரு கோலடித்து ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டுவந்த ரொனால்டோ, 88ஆவது நிமிடத்தில் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
பின்னர் பெனால்டி ஷூட் அவுட்டில் போர்ச்சுகல் அணி கடைசி வாய்ப்பை கோலாக்கியதும், உணர்ச்சிவயப்பட்ட ரொனால்டோ, கண்ணீர் விட்டு அழுதபடி தரையில் விழுந்தார்.
இதனைத்தொடர்ந்து உடனடியாக எழுந்து போர்ச்சுகலின் தலைமைப் பயிற்சியாளர் ராபர்டோ மார்டினெஸை ஆரத்தழுவினார். தொடர்ந்து அணியின் இதர வீரர்களிடமும் சென்று அவர்களை அன்பாக நீண்ட நேரம் கட்டிப்பிடித்து அழுது உணர்ச்சிப் பெருக்குடன் காணப்பட்டார்.