தவறாக அனுப்பி விட்டீர்களா? ஃபேஸ்புக் மெசஞ்சர் செய்தியை அழிக்கலாம்!

தொடர்பில்லாத குழுவுக்கு அல்லது நபருக்கு மெசஞ்சரில் செய்தியை அனுப்பியிருந்தாலோ, யாருக்காவது அனுப்பியிருந்த செய்தி தவறாக இருந்து திருத்தம் செய்ய விரும்பினாலோ அதற்கான வசதியை ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
 
முகநூல் நிறுவனத்தின் மெசஞ்சர் செயலியை நூறு கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு, ஃபேஸ்புக் நிறுவனத்தின் உடன் நிறுவனரும் தலைமை அதிகாரியுமான மார்க் ஸக்கர்பெர்க், தாம் மெசஞ்சரில் அனுப்பியிருந்த செய்திகளை அழித்தார். பயனர்கள் அனைவரும் தங்களுக்கும் அந்த வசதி அளிக்கப்பட வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்கள். இதுவரைக்கும் பயனர்கள் ஒருமுறை மெசஞ்சரில் ஒரு பதிவை அனுப்பிவிட்டால் அதில் மாற்றம் செய்ய இயலாத நிலை இருந்து வந்தது.
 
தற்போது, மெசஞ்சரில் அனுப்பப்பட்ட செய்தியை அழிக்கும் மற்றும் திருத்தம் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மெசஞ்சரில் அனுப்பப்பட்ட செய்தியை அழிப்பதற்கான வழிமுறை:
நீங்கள் அழிக்க விரும்பும் செய்தியின் மேல் விரலை வைத்து தொடர்ந்து அழுத்திக் கொண்டே இருக்கவும்.
 
அதில் தோன்றும் Remove என்ற கட்டளையை தெரிவு செய்யவும்.
பின்னர் Remove for Everyone என்ற கட்டளையை தெரிவு செய்யவும்.
அப்போது நீங்கள் அனுப்பிய குறிப்பிட்ட செய்தி அழிக்கப்படும். மேலும் You removed a message என்ற தகவலும் திரையில் தோன்றும்.
மெசஞ்சரில் அனுப்பிய செய்தியை திருத்தம் செய்ய வசதியாக அதற்கான பட்டி பத்து நிமிட நேரம் அனுமதி கொடுக்கும். அதேபோன்று ஒரு செய்தியை மெசஞ்சரில் அனுப்பி பத்து நிமிடங்கள் கடந்த பின்னர் Remove for Everyone என்ற கட்டளையை பயன்படுத்த இயலாது.
 
முகநூல் அறிமுகம் செய்திருக்கும் இந்த புதிய வசதி, ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு ஆகிய இரு பயனர்களுக்கும் கிடைக்கும்.
 
Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email