பழங்களின் பலன்கள்

பழத்தை விரும்பாதோர் யாரும் இருக்க இயலாது. விருந்தினர் வீட்டுக்குச் செல்லும்போது, பலவகை பண்டங்கள், இனிப்புகளுக்குப் பதிலாக பழங்கள் வாங்கி செல்லும் வழக்கம் பரவலாகி வருகிறது. நோயாளிகள் என்று அல்ல; மரியாதை நிமித்தமாக பிரமுகர்களைப் பார்க்கச் சென்றால்கூட பழங்களை வாங்கி செல்லலாம்.
 
ஏனெனில், பழங்கள் உடலுக்கு நன்மை தருமே தவிர, தீமை விளைவிக்காது. எந்தப் பழத்தில் என்ன சத்து உள்ளது என்ற அறிந்து கொண்டோமானால் அவற்றை சாப்பிடுவதில் பூரண நன்மை கிடைக்கும்.
 
ஆப்பிள்: ஆக்சிஜனேற்ற தடுப்பான்கள் என்னும் ஆன்டிஆக்சிடண்டுகள் ஆப்பிள் பழத்தில் அதிகம் உள்ளன. இந்த ஆன்டிஆக்சிடண்டுகள் நோய் எதிர்ப்பு ஆற்றலை பெருக்கும். ஆப்பிளின் காணப்படும் கரைய கூடிய, கரையாத நார்ச்சத்து மலச்சிக்கலை தவிர்க்கும். ஆப்பிளின் குவர்சிட்டின் என்னும் தாவர நிறமி உள்ளது. அது ஒவ்வாமை என்னும் அலர்ஜியை தடுக்கும்.
 
வாழைப்பழம்: முக்கனிகளுள் ஒன்றாக கருதப்படுவது வாழை. எளிதாக கிடைக்கக்கூடிய வாழைப்பழத்தில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் காணப்படுகிறது. இரத்த அழுத்தத்தை சீராக வைப்பது மற்றும் மூளை செல்களில் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் தன்மை ஆகியவை வாழைப்பழத்திற்கு உண்டு. ப்ரோடீஸ் என்னும் செரிமான நொதியானது வினை புரிவதை தடுக்கக்கூடிய பண்பு வாழைப்பழத்திற்கு இருப்பதால், அல்சர் என்னும் வயிற்று அழற்சி ஏற்படுவதை தடுக்கும்.
ஆரஞ்சு: ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் ஆகியவை அடங்கியுள்ளன. தசையியக்கம் மற்றும் செரித்தல் ஆகிய பணிகளின் திறனை உயர்த்த இவை உதவும். ஆரஞ்சு பழத்தின் சுளைகளுக்கு நடுவே உள்ள சவ்வில் உள்ள ஹெஸ்பெரிடின் என்ற பொருள் கொலஸ்ட்ராலை (ஒரு வகை கொழுப்பு) குறைக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
 
பப்பாளி: செரித்தலை ஊக்குவிக்கக்கூடிய பப்பாயின் என்னும் பொருள் இப்பழத்தில் நிறைந்துள்ளது. டிஎன்ஏ என்னும் மரபணுவின் பழுது நீக்குதல் மற்றும் தொகுப்பில் உதவக்கூடிய வைட்டமின் பி9 என்னும் ஃபோலேட் சத்தும் பப்பாளியில் உள்ளது.
எலுமிச்சை: உடம்பிலுள்ள கொழுப்புச் சத்து மற்றும் கொலஸ்ட்ரால் என்னும் ஒரு வகை கொழுப்பு ஆகியவற்றை குறைக்கக்கூடிய சிட்ரிக் அமிலம் எலுமிச்சையில் உள்ளது. கவலை, பதற்றம் மற்றும் சோர்வை குறைக்கக்கூடிய தன்மையும் இதற்கு உள்ளது. சிட்ரிக் அமிலத்திற்கு செரிமானத்தை ஊக்கப்படுத்தும் திறனும் உள்ளது.
 
திராட்சை: ரெஸ்வெரட்ரோல் என்னும் ஆக்சிஜனேற்ற தடுப்பான் (ஆன்டிஆக்சிடண்ட்) உடல் செல்கள் விரைவில் முதுமையடைவதையும் இதய நோயையும் தடுக்கக்கூடியது. இது தவிர வைட்டமின் பி9 என்னும் ஃபோலேட், வைட்டமின்கள் பி6, சி மற்றும் ஏ ஆகியவையும் திராட்சைப்பழத்தில் உள்ளன. இவை அனைத்துமே உடலில் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகப்படுத்தக்கூடியவை ஆகும்.
 
பழங்களை அவற்றில் அடங்கியுள்ள சத்துக்களின் விவரங்களை கூறி, சாப்பிடும்படி குடும்பத்தினரை, உறவினைரை உற்சாகப்படுத்தலாம்.
 
 
 
 
Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email