தேனிரவு.... உறக்கம் தழுவுங்கள்

'தூக்கம்' உடல் நலத்தோடு நெருங்கிய தொடர்புடையது. 'உறங்காமல் உழைத்து உயர்ந்தார்' என்பது பேச்சுக்கு நன்றாக இருக்கும். ஆனால், போதுமான உறக்கம் இல்லாமல் உழைத்துக் கொண்டே இருந்தால், வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போவதோடு, உடல் ஆரோக்கியமும் கெட்டுப்போகும்.

 

நன்றாக உறங்குபவர்கள், போதுமான அளவு மட்டுமே உண்பார்களாம். தூக்கம் குறைய குறைய சாப்பிடும் உணவின் அளவு கூடுதலாகும்; உடலில் கொழுப்பின் அளவு உயரும்; மூளை செல்கள் பாதிக்கப்படக்கூடிய மற்றும் இதயநோய் வரக்கூடிய அபாயம் அதிகரிக்கும். உறக்கமின்மை, உடலில் குளூக்கோஸூக்கான வளர்சிதை மாற்றத்தில் குழப்பத்தை உருவாக்குவதுடன், சர்க்கரை நோய் என்னும் நீரிழிவையும் கொண்டு வரும்.

தினமும் ஏழு முதல் எட்டு மணி நேர உறக்கம் அவசியம்.

 

அப்போதுதான் உடலும் மூளையும் சுறுசுறுப்பாக இயங்க முடியும். உறக்கத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக உறக்க அமைப்பு, ஒரு நாளை உறக்க தினமாக அனுசரித்து வருகிறது. 2019ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி உலக உறக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தினமும் படுக்கைக்குச் செல்வதற்கும் விழிப்பதற்கும் நேரத்தை குறிப்பிட்டு வைத்துக்கொள்ளுங்கள். அதை தவறாமல் கடைபிடித்து வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

படுக்கையறையில் வெளிச்சம் இல்லாதிருந்தால் உறக்கம் வரும். புத்தகம் வாசித்தல், மனதுக்கு இதமான இசை மற்றும் பாடல்கள் கேட்டல், வெதுவெதுப்பான நீரில் குளித்தல் ஆகியவை தூக்கத்தை வரவழைக்கும்.

 

உறங்க செல்லும் நேரத்தில் தொலைக்காட்சி பார்த்தல், மொபைல் போனை பார்த்தல், காஃபி அருந்துதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற செயல்கள் தூக்கத்திற்கு இடைஞ்சல் விளைவிக்கும். தூங்கச் செல்லும் முன் எந்த உடற்பயிற்சியிலும் ஈடுபட வேண்டாம். தியானம் மற்றும் பிரார்த்தனை செய்யலாம்.

 

சாப்பிடாமல் வெறும் வயிற்றோடு அல்லது மிதமிஞ்சி தொண்டை வரைக்கும் சாப்பிட்டு விட்டு படுக்கைக்கு சென்றால் உறக்கம் பாதிப்புக்குள்ளாகும். தூங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பாக இரவு உணவை சாப்பிட்டு விடுங்கள். செரிப்பதற்கு கடினமான உணவு பொருள்களை இரவில் உண்ண வேண்டாம். மாலை வேளைக்குப் பின்னர் அதிக அளவில் நீர் அருந்துவதை தவிர்க்கவும்.

 

உறங்கச் செல்லும் முன்னர் வெதுவெதுப்பான பால் அருந்துவது நல்லது. பாலில் உள்ள 'டிரைப்டோபன்' (tryptophan)என்னும் அமினோ அமிலம் தூக்கத்தை தூண்டும். அதேபோன்று, ஒரு சிறு கரண்டி அளவு தேன் குடித்தால் நன்றாக உறங்கலாம். தேனிலுள்ள அரெக்ஸின் என்னும் நரம்புகளுக்கிடையே செய்தியை கொண்டு செல்லும் புரதம் போன்ற மூலக்கூறு தேனில் உள்ளது. அரெக்ஸின் (Orexin), விழிப்புணர்வை குறைக்கும் தன்மை கொண்டது. ஆகவே, தேன் அருந்தினால் உறக்கம் நன்றாக வரும்.

ஆழ்ந்து உறங்குவோம்; ஆரோக்கியமாக வாழுவோம்!

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்