உயர் இரத்த அழுத்தமா? தேங்காய் தண்ணீர் பருகுங்கள்

தேங்காய் - அன்றாடம் சமையலுக்குப் பயன்படும் பொருள். பெரும்பாலும் அதில் இருக்கும் தண்ணீரை கீழே கொட்டிவிட்டு, சமையலை கவனிக்கச் சென்று விடுவதே வழக்கம். கிராமங்களில், தேங்காய் தண்ணீர் இன்றும்கூட தாராளமாக கிடைக்கிறது.
இரத்தக் கொதிப்பை குணமாக்கும்.
 
தேங்காய் தண்ணீரில் வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகிய சத்துகள், தாதுக்கள் உள்ளன. இதில் உள்ள பொட்டாசியம் தாது, இரத்த அழுத்தத்திற்குக் காரணமாகும் சோடியத்தின் செயல்பாட்டை சமன்படுத்தி, இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. புதிதாக கிடைக்கும் தேங்காய் தண்ணீரை தினமும் இரண்டு வேளை அருந்தி வந்தால் இரத்தக் கொதிப்பு என்னும் உயர் இரத்த அழுத்தம் குறைகிறது என கூறப்படுகிறது. பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் தேங்காய் தண்ணீர் எதிர்பார்த்த அளவு நன்மை தருவதில்லை.
 
மாரடைப்பை தடுக்கும்
 
இளநீர் மற்றும் தேங்காய் தண்ணீர் இரண்டுமே இருதயத்திற்கு நன்மை பயக்கக்கூடியன. நல்ல கொலஸ்ட்ரால் என்று பொதுவாக கூறப்படும் ஹெச்டிஎல் அளவை தேங்காய் தண்ணீர் அதிகரிக்க உதவும். மாறாக, கெட்ட கொழுப்பு எனப்படும் எல்டிஎல் அளவை இது குறைக்கிறது. ஆன்டிஆக்சிடெண்ட் என்னும் ஆக்சிஜனேற்ற தடுப்பான்கள் இதில் உள்ளதால், இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. இரத்த ஓட்டம் சீராவதால், மாரடைப்பு மற்றும் மூளை செல்களில் இரத்த அடைப்பு ஆகியவை நேராமல் தடுக்கும்.
 
உடல் எடையை குறைக்கும்
 
தேங்காய் தண்ணீர் வயிற்றுக்கு இதமானது. குறைந்த கலோரி என்னும் ஆற்றல் கொண்டது. இதில் உள்ள உயிரி நொதிகள் (என்சைம்) செரிமானத்தை தூண்டுகின்றன. கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கின்றன. மேலும் தேங்காய் தண்ணீரிலுள்ள பொட்டாசியம் சத்து, உடலில் தண்ணீர் தேங்க காரணமாகும்  சோடியத்தை சமன் செய்வதால் உடலிலுள்ள தேவைக்கு அதிகமான தண்ணீரை வெளியேற்றுகிறது. அதனுடன் உடலுக்குத் தேவையற்ற நச்சுப்பொருள்களையும் அகற்றுகிறது. இதனால், தேவைக்கு அதிகமான உடல் எடை குறைவதற்கு தேங்காய் தண்ணீர் உதவும். 
எடையை குறைக்க விரும்புவோர், வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை 250 மிலி தேங்காய் தண்ணீர் பருகலாம். 
 
தலைவலிக்கு டாட்டா!
 
தேங்காய் தண்ணீர் தலைவலியை குணமாக்க உதவுகிறது. மைக்ரேன் என்னும் ஒற்றை தலைவலி உள்ளிட்ட பெரும்பாலான தலைவலிகள், உடலில் நீர்ச்சத்து குறைவதால் உருவாகிறது. ஒற்றைத் தலைவலி மெக்னீசியம் குறைவால் ஏற்படுகிறது. தேங்காய் தண்ணீரில் எலெக்ட்ரோலைட் என்னும் சத்துகள் இருப்பதால் அது உடலில் நீர்ச்சத்து அதிகரிக்க காரணமாகிறது. இதில் மெக்னீசியமும் இருப்பதால் தலைவலியை குணமாக்குகிறது.
 
நீரிழிவு பாதிப்பை தவிர்க்கும்
 
உடலில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் இன்சுலின் சுரப்புக்கு தேங்காய் தண்ணீர் உதவுகிறது. இதில் அமினோ அமிலங்கள் இருப்பதால், சர்க்கரையின் அளவை சமன் செய்கிறது. உடலின் பாகங்களின் மரத்துப்போன உணர்வு ஏற்படுவதை, இரத்த ஓட்டத்தை சீராக்குவதன் மூலம் தேங்காய் தண்ணீர் தடுக்கிறது.
ஆகவே, தேங்காய் தண்ணீரை அலட்சியம் செய்யாமல் பருகுங்கள்!
Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்