எந்த உப்பு உடலுக்கு நல்லது?

Sea Salt vs Table Salt

by SAM ASIR, Mar 20, 2019, 17:45 PM IST
"சாப்பாடு எப்படி இருக்கிறது?" என்ற கேள்வி எப்போதும் நம்மிடம் கேட்கப்படுகிறது. பெரும்பாலும், "கொஞ்சம் உப்பு கூட இருந்தால் இன்னும் ருசியாக இருந்திருக்கும்" என்றோ, "உப்பு கொஞ்சம் ஜாஸ்தியாயிடுச்சு... மற்றபடி நன்றாக இருந்தது," என்றோ பதில் சொல்கிறோம்.
 
'உப்பில்லா பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. உணவுப் பொருள்களுக்கு ருசியை தருவதில் உப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. ருசிக்கு மட்டுமல்ல; உடல் ஆரோக்கியத்துக்கும் சரியான அளவு உப்பு அவசியம். உப்பின் அளவு குறைந்திடவோ, கூடிவோ கூடாது. போதுமான அளவு மட்டுமே சேர்க்க வேண்டும்.
 
'உப்பு' என்று வரும்போது, தற்போது ஒரு பெரிய கேள்வி நம் முன் பொதுவாக வைக்கப்படுகிறது. "சாதாரண உப்பு, மேசை உப்பு (தூள் உப்பு) - எந்த உப்பு உடலுக்கு நல்லது?" என்பதே அந்தக் கேள்வி.
 
'சாதாரண உப்பு' என்பது, கடல் நீரை ஆவியாக்கி பெறப்படுவது. 'மேசை உப்பு' பூமிக்கடியில் உள்ள படிமங்களை வெட்டி எடுக்கப்படுவது. இந்த வேறுபாட்டை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
 
சாதாரண உப்பின் வடிவம் வேறு; மேசை உப்பின் வடிவம் வேறு. அதேபோன்று நிறத்தில் மற்றும் ருசியில் சில நுண்ணிய வேறுபாடுகளை உணர முடியும்.
 
கடல் நீர் ஆவியான பிறகு கிடைக்கும் உப்பு பெரும்பாலும் அப்படியே புழக்கத்திற்கு வருகிறது. அதிக சுத்திகரிப்புக்கு அது உட்படுத்தப்படுவதில்லை. ஆனால், மேசை உப்பு பல்வேறு சுத்திகரிப்புக்கு பின்னரே நம்மிடம் வந்து சேர்கிறது. சுத்திகரிக்கப்படாததால் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற சில தாதுக்கள், கடல் உப்பில் காணப்படும்.
தோண்டியெடுக்கப்பட்ட உப்பினை சுத்திகரித்து கால்சியம், பொட்டாசியம் போன்ற தாதுக்களை நீக்கி மேசை உப்பாக விற்பனைக்கு அனுப்புகிறார்கள். சுத்திகரிப்பின்போது, அயோடின் மேசை உப்புடன் சேர்க்கப்படுகிறது. உடலில் தைராய்டு சுரப்பின் அளவை கட்டுக்குள் வைப்பதற்கு அயோடின் அவசியம்.
 
எல்லா உப்புமே ஒன்றுதான்! ஆம், உப்பெனப்படுவது சோடியம் குளோரைடுதான்! சிலர், கடல் உப்பில் சோடியத்தின் அளவு குறைவாக உள்ளது என்று நம்புகிறார்கள். அது தவறான நம்பிக்கை. எவ்வகை உப்பாயினும் அதில் 40 விழுக்காடு சோடியம் காணப்படும். ஒரு தேக்கரண்டி (டீ ஸ்பூன்) உப்பு எடுத்தால் ஒருவேளை, படிகமாக இருக்கக்கூடிய கடல் உப்பு குறைவான அளவிலும், தூளாக இருக்கக்கூடிய மேசை உப்பு அளவில் அதிகமாகவும் இருக்கக்கூடும். ஆனால், நாளொன்றுக்கு 5 கிராமுக்கும் குறைவாகவே உப்பினை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள அளவாகும்.
 
சாதாரண உப்பு, தூள் உப்பு எதை வேண்டுமானாலும் உங்கள் விருப்பம்போல் சேர்த்துக் கொள்ளுங்கள்; ஆனால், எந்த உப்பையும் அளவுக்கு அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டாம். அது உடல் நலத்துக்கு கேட்டை விளைவிக்கும்.

You'r reading எந்த உப்பு உடலுக்கு நல்லது? Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை